கவிழ்ந்தது சுற்றுலா படகு உயிர் தப்பினர் 40 பயணியர்
கவிழ்ந்தது சுற்றுலா படகு உயிர் தப்பினர் 40 பயணியர்
ADDED : மே 21, 2024 01:11 AM

கார்வார் கடற்கரையில் கவிழ்ந்த சுற்றுலா படகு. இடம்: உத்தர கன்னடா.
உத்தர கன்னடா, கர்நாடகாவின் கார்வார் கடற்கரையில், அளவுக்கு அதிகமான பயணியரை ஏற்றிச் சென்ற சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உயிர் காக்கும் கவசம் அணிந்திருந்ததால், 40 சுற்றுலா பயணியரும் உயிர் தப்பினர்.
கர்நாடகாவில் உத்தர கன்னடா மாவட்டம், கும்டாவின் முந்தங்கியைச் சேர்ந்த கணேஷ், ரமேஷ் ஆகியோருக்கு சொந்தமான சுற்றுலா படகு, கோடை விடுமுறையை ஒட்டி கார்வார் கடற்கரையில் சவாரிக்கு பயன்படுத்தப்பட்டது. இந்த படகில், ஒரே நேரத்தில் 28 பயணியரை மட்டுமே ஏற்ற அனுமதி உள்ளது.
ஆனால், நேற்று முன்தினம் 40 பயணியரை ஏற்றியபடி கடலுக்குள் இந்த படகு புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில், அதிக பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்தது.
படகில் இருந்தவர்கள் உயிர் காக்கும் கவசம் அணிந்திருந்ததால், நீரில் மூழ்காமல் தத்தளித்தனர். தகவலறிந்த கடலோர பாதுகாப்பு படையினர், சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கடற்கரையில் இருந்த மீனவர்களும் உடனடியாக விரைந்து, பயணியரை மீட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அனைவரும் உயிர் காக்கும் கவசம் அணிந்திருந்ததால், உயிர் தப்பினர். அளவுக்கு அதிகமாக பயணியரை ஏற்றிச் சென்றதாக, படகின் உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துஉள்ளனர்.

