ADDED : மே 07, 2024 06:31 AM

மைசூரு: அரசு பஸ் வயலில் பாய்ந்ததில், டிரைவரின் கை முறிந்தது. பயணியர் 40 பேர் காயம் அடைந்தனர்.
மைசூரு கே.ஆர்.நகரில் இருந்து கெஸ்துாருக்கு நேற்று காலை, கர்நாடக அரசு பஸ் சென்றது. இந்த பஸ்சில் 70 பயணியர் இருந்தனர். கெஸ்துார் அருகே கொப்பலு கேட் பகுதியில் சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், வயலில் பாய்ந்தது.
ஸ்டியரிங்கில் சிக்கி வளைந்ததால், டிரைவரின் வலது கை முறிந்தது. இருக்கைகளில் முட்டிக் கொண்டதால், பயணியர் 40 பேருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
மேலும் 30 பயணியருக்கு எந்த காயமும் இல்லை. காயம் அடைந்த பயணியர், கை முறிந்த டிரைவர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஜே.சி.பி., இயந்திரம் உதவியுடன், வயலுக்குள் பாய்ந்த பஸ், கயிறு கட்டி வெளியே இழுக்கப்பட்டது. பிரேக் செயலிழந்ததால், விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து கே.ஆர்.நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.