
பெங்களூரு:
அன்றாட பொருட்களின் விலை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. பூண்டு, வெங்காய விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. பூண்டின் விலை கிலோவுக்கு 400 ரூபாயை எட்டியுள்ளது.
சில மாதங்களாக மழை பெய்வதால், காய்கறி விளைச்சல் பாழானது. இதன் விளைவாக விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. பண்டிகைகள் வருவதால், விலை மேலும் அதிகரிக்கிறது. பீன்ஸ், பீட்ரூட், பாகற்காய், உருளைக்கிழங்கு என, காய்கறிகளின் விலை கைக்கு எட்டும்படி இல்லை.
குறிப்பாக வெள்ளை பூண்டு, வெங்காயம் விலை மக்களை அச்சுறுத்துகிறது. பூண்டு விலை கிலோவுக்கு 400 ரூபாயை எட்டியுள்ளது. வெங்காயம் விலை 70 ரூபாயாக அதிகரித்துள்ளது. சில கடைகளில் 80 ரூபாய்க்கும் விற்கின்றனர்.
இதற்கு முன்பு இஞ்சி, கிலோவுக்கு 80 ரூபாயாக இருந்தது. இப்போது 300 ரூபாயாக உயர்ந்துள்ளது. காய்கறிகளை வாங்கவே மக்கள் தயங்குகின்றனர். விநாயகர் சதுர்த்தி பண்டிகை நெருங்குவதால், விலை மேலும் அதிகரிக்கும் என, வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
விலை அதிகரித்து, நல்ல லாபம் கிடைத்தாலும் விவசாயிகளால் மகிழ்ச்சி அடைய முடியவில்லை. ஏன் என்றால் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.