கார்கே குழுமத்துக்கு 5 ஏக்கர் அரசு நிலம் கவர்னரிடம் பா.ஜ., பரபரப்பு புகார்
கார்கே குழுமத்துக்கு 5 ஏக்கர் அரசு நிலம் கவர்னரிடம் பா.ஜ., பரபரப்பு புகார்
ADDED : ஆக 28, 2024 06:19 AM

பெங்களூரு : காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குடும்பத்தினருக்கு சொந்தமான சித்தார்த்தா விஹாரா டிரஸ்ட்டிற்கு, 5 ஏக்கர் அரசு நிலம் ஒதுக்கப்பட்டதில், அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளதாக, பா.ஜ.,வை சேர்ந்த மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் சலவாதி நாராயணசாமி, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் புகார் அளித்துள்ளார்.
காங்கிரஸ் தேசிய தலைவராக, கர்நாடகாவின் கலபுரகியை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே உள்ளார். இவரது தலைமையில், 'சித்தார்த்தா விஹாரா டிரஸ்ட்' செயல்பட்டு வருகிறது. இந்த குழுமத்தில், அவரது மனைவி ராதாபாய், மகனும், மாநில அமைச்சருமான பிரியங்க் கார்கே, இளைய மகன் ராகுல் கார்கே, மருமகனும், எம்.பி.,யுமான ராதாகிருஷ்ணா தொட்டமணி ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
வசந்தபுரா
இதற்கிடையில், பெங்களூரு தேவனஹள்ளி அருகில் உள்ள வசந்தபுராவில் கர்நாடக தொழில் மேம்பாட்டு வாரியம் சார்பில், 83.50 ஏக்கரில் விண்வெளி பூங்கா அமைக்கப்படுகிறது. சி.ஏ., எனும், 'சிவிக் அமினிட்டி' என்ற மக்களின் நலன் கருதி, குறிப்பிட்ட வசதிக்காக இந்த நிலத்தை பயன்படுத்த வேண்டும்.
இங்கு, எஸ்.சி., ஒதுக்கீட்டின் கீழ், 5 ஏக்கர் நிலத்தை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக, சித்தார்த்தா விஹாரா டிரஸ்ட்டிற்கு வழங்கும்படி, ராகுல் கார்கே விண்ணப்பித்திருந்தார். இதை ஏற்று, அந்த டிரஸ்டிற்கு 5 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த டிரஸ்ட், 25 கோடி ரூபாய் இங்கு முதலீடு செய்ய உள்ளது.
மாநில அரசில் ஐ.டி., - பி.டி., துறை அமைச்சராக இருக்கும் பிரியங்க் கார்கே, அதிகார துஷ்பிரயோகம் செய்து, தங்கள் டிரஸ்டிற்கு நிலம் ஒதுக்க செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம், கர்நாடக மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் சலவாதி நாராயணசாமி நேற்று புகார் அளித்தார்.
பின், அவர் கூறியதாவது:
தொழிற்சாலைகளுக்காக மனைகள் பெறும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால், சி.ஏ., மனைகள் பெறுவதற்கு சில விதிகள் உள்ளன. அந்த இடத்தை சமுதாய கூடம், மருத்துவமனை உள்ளிட்ட மக்களுக்கு உதவும் சமூக நலனுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
நிராகரிப்பு
இந்த இடத்துக்கு பலர் விண்ணப்பித்து, அவை நிராகரிக்கப்பட்டுள்ளன. செல்வாக்கு மிக்க கார்கே குடும்பத்தினருக்கு சொந்தமான குழுமத்திற்கு மட்டும் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இது தான் தற்போது சந்தேகத்தை எழுப்புகிறது.
புத்த விஹார் கட்டுவதாக, கலபுரகியில் இந்த குழுமம் பதிவு செய்துள்ளது. இது, ஆன்மிகம் தொடர்பான குழுமம். ஆனால், 'ஏரோ ஸ்பேஸ்' சம்பந்தப்பட்ட இடத்தை பெற்றுள்ளது. கார்கே குடும்பத்தினர் மட்டுமே தலித்கள் அல்ல.
அதே இடத்தை 10 எஸ்.சி., குடும்பத்தினருக்கு பிரித்து கொடுத்திருந்தால், அந்த குடும்பங்கள் வாழ்ந்திருக்கும். இதன் பின்னணியில் அமைச்சர் பிரியங்க் கார்கேவின் நெருக்கடி உள்ளது.
இவ்வாறு கூறினார்.