பத்மநாபசுவாமி ஊர்வலத்துக்காக 5 மணி நேரம் விமானம் நிறுத்தம்
பத்மநாபசுவாமி ஊர்வலத்துக்காக 5 மணி நேரம் விமானம் நிறுத்தம்
ADDED : ஏப் 18, 2024 02:32 AM
திருவனந்தபுரம், பத்மநாபசுவாமி கோவிலில் பங்குனி ஆராட்டு விழாவை முன்னிட்டு, வரும் 21ம் தேதி திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் ஐந்து மணி நேரத்துக்கு விமான சேவைகள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுக்கு இரு முறை நடக்கும் பங்குனி ஆராட்டு மற்றும் ஐப்பசி ஆராட்டு விழா மிகவும் பிரபலம்.
நுாற்றாண்டு பழமை வாய்ந்த இந்த ஆராட்டு விழாவில், பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.
இந்தாண்டுக்கான பங்குனி ஆராட்டு விழா கடந்த 12ம் தேதி துவங்கியது. அதன் நிறைவு விழா வரும் 21ம் தேதி நடக்கிறது.
நிறைவு விழாவின் முக்கிய நிகழ்வாக பத்மநாபசுவாமி உற்சவரை, சங்குமுகம் கடலில் நீராட செய்வதற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்வர்.
இந்த நிகழ்ச்சி பாரம்பரியமாக கோவிலில் இருந்து புறப்பட்டு, திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள பகுதி வழியாகத் சங்குமுகம் கடற்கரையை அடையும். கடந்த 1932ல் திருவனந்தபுரம் விமான நிலையம் அமைந்த பின்னும் அதே பாதையில் பத்மநாபசுவாமி பயணிப்பது தொடர்கிறது.
இதற்காக ஆண்டுக்கு இரண்டு நாட்கள் சில மணி நேரம் விமான நிலையம் மூடப்படும்.
அந்த வகையில், வரும் 21ம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை, 5 மணி நேரங்களுக்கு விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக, விமான நிலைய நிர்வாகம் அறிவித்துஉள்ளது.

