ADDED : பிப் 14, 2025 11:05 PM

கொப்பால்: ''கொப்பாலில் ஓநாய்கள் சரணாலயத்தில் ஓநாய் ஐந்து குட்டிகளை ஈன்றுள்ளது,'' என வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே தெரிவித்தார்.
கொப்பால் மாவட்டம், கங்காவதியில், பங்காபூர் ஓநாய்கள் சரணாலயம் 820 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்கு, கடந்த மாதம் ஓநாய் ஒன்று, எட்டு குட்டிகளை ஈன்றது. இதன் மூலம் இங்கு ஓநாய்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது.
இந்நிலையில், வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த மாதம் இந்த சரணலாயத்தில் எட்டு குட்டிகளை ஓநாய் ஈன்றது. இம்மாதம் மற்றொரு ஓநாய், ஐந்து குட்டிகளை ஈன்றுள்ளது. இதன் மூலம், இந்த சரணலாயத்தில், ஓநாய்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.
இந்த சரணாலயத்தில் இயற்கையாக அமைந்த குகைகள் உள்ளன. இவை வன விலங்குகளுக்கு வாழ்விடமாக அமைந்துள்ளது. ஓநாய்கள், சிறுத்தைகள், கழுதை புலி உட்பட பல விலங்குகள் உள்ளன. மயில்களையும் பார்க்கலாம்.
இங்கு வரும் சுற்றுலா பயணியர், ஓநாய்களை தொந்தரவு செய்யாத வகையில், அவைகள் தங்கி உள்ள குகைகள் அருகில், கண்காணிப்பு கேமராக்கள் வைக்க உத்தவிடப்பட்டு உள்ளது. விரைவில் இங்கு 'சபாரி' நடைமுறைப்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.