லடாக் யூனியன் பிரதேசத்தில் உருவாகுது 5 புதிய மாவட்டங்கள்!: அரசு திட்டங்கள் இனி எளிதில் சென்று சேரும்
லடாக் யூனியன் பிரதேசத்தில் உருவாகுது 5 புதிய மாவட்டங்கள்!: அரசு திட்டங்கள் இனி எளிதில் சென்று சேரும்
ADDED : ஆக 27, 2024 12:42 AM

புதுடில்லி: லடாக் யூனியன் பிரதேசத்தில் ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தெரிவித்தார். 'இதன் வாயிலாக, மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்கள் அனைத்தும், லடாக்கில் வசிக்கும் அடித்தட்டு மக்களை எளிதில் சென்று சேரும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட 2019 வரை, அம்மாநிலத்தின் ஒரு பகுதியாக லடாக் இருந்தது. சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பின், ஜம்மு - காஷ்மீர், லடாக் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.
லடாக்கில், லே மற்றும் கார்கில் என இரண்டு மாவட்டங்கள் தற்போது உள்ளன. இரு மாவட்டங்களும் தன்னாட்சி மாவட்ட கவுன்சில்களால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்நிலையில், லடாக்கில் புதிதாக ஐந்து மாவட்டங்களை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தொலைநோக்கு பார்வை
இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
வளர்ச்சியடைந்த மற்றும் வளமான லடாக்கை உருவாக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றும் முயற்சியாக, லடாக் யூனியன் பிரதேசத்தில் ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
சன்ஸ்கர், திராஸ், ஷாம், நுப்ரா மற்றும் சாங்தாங் உள்ளிட்ட ஐந்து புதிய மாவட்டங்களாக உருவாக உள்ளன.
இந்த மாவட்டங்களின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் நிர்வாகத்தை வலுப்படுத்துவதன் வாயிலாக, மக்களுக்கான நலத்திட்டங்கள் அனைத்தும் அவர்களின் வீட்டு வாசலுக்கு வந்து சேரும். லடாக் மக்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை உருவாக்க மோடி அரசு உறுதி ஏற்றுள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'லடாக்கில் ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்குவது சிறந்த நிர்வாகம் மற்றும் வளர்ச்சிக்கான ஒரு முயற்சி' என, பிரதமர் நரேந்திர மோடி தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
மக்கள் தொகை
மத்திய அரசின் இந்த முடிவு குறித்து, மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி கூறியதாவது:
பரப்பளவில் லடாக் மிகப் பெரிய யூனியன் பிரதேசம். நாட்டின் குறைந்த மக்கள் தொகை உடைய பகுதிகளில் ஒன்று. அரசின் வளர்ச்சி திட்டங்களை இங்குள்ள அடித்தட்டு மக்களிடம் சென்று சேர்க்க, மாவட்ட நிர்வாகம் பல சிரமங்களை சந்தித்து வருகிறது.
இந்த புதிய மாவட்டங்கள் உருவான பின், மத்திய அரசு மற்றும் லடாக் நிர்வாகத்தின் அனைத்து மக்கள் நலத் திட்டங்களும் மக்களை எளிதில் சென்றடையும். மேலும், அதிக எண்ணிக்கையிலான மக்களும் அவற்றை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
கட்டமைப்பு
மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த முக்கியமான முடிவு, லடாக்கின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஐந்து புதிய மாவட்டங்களை அமைப்பதற்கு கொள்கை ரீதியில் ஒப்புதல் வழங்குவதோடு, மாவட்ட தலைமையகம், எல்லைகளை வரையறுப்பது, கட்டமைப்பு, பதவிகளை உருவாக்குதல் போன்ற பல்வேறு அம்சங்களை மதிப்பிடுவதற்கு, ஒரு குழுவை அமைக்கும்படி லடாக் நிர்வாகத்தை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த மதிப்பீட்டு அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் சமர்ப்பிக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
குழுவின் அறிக்கையை பெற்ற பின், இந்த அறிக்கையின் அடிப்படையில் புதிய மாவட்டங்களை உருவாக்குவது தொடர்பான இறுதி முன்மொழிவை, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு லடாக் நிர்வாகம் அனுப்பி வைக்கும். அதன் மீது அமைச்சகம் நடவடிக்கைஎடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.