ஓய்வு இன்ஜினியரை மிரட்டி ரூ.2.21 கோடி பறித்த 5 பேர் கைது
ஓய்வு இன்ஜினியரை மிரட்டி ரூ.2.21 கோடி பறித்த 5 பேர் கைது
ADDED : ஆக 17, 2024 11:04 PM
பெங்களூரு: 'உங்கள் பெயருக்கு வந்த பார்சலில் போதைப்பொருள் உள்ளது. கைது செய்யாமல் இருக்க பணம் தர வேண்டும்' என மிரட்டி, ஓய்வு பெற்ற இன்ஜினியரிடம் 2.21 கோடி ரூபாய் பறித்த, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
குடகு மாவட்டம், மடிகேரியைச் சேர்ந்தவர் சுனில்குமார், 67. பொதுப்பணித் துறையில் இன்ஜினியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
கடந்த மாதம் 25ம் தேதி, சுனில் குமாரிடம் ஒருவர் மொபைல் போனில் பேசினார். ''மும்பை விமான நிலையத்திலிருந்து பேசுகிறேன். உங்கள் பெயருக்கு வந்த பார்சலில் போதைப் பொருள் உள்ளது. நாங்கள் பறிமுதல் செய்துள்ளோம். உங்களை கைது செய்யாமல் இருக்க, நான் கூறும் வங்கிக்கணக்கிற்கு பணம் அனுப்புங்கள்,'' என கூறியுள்ளார்.
பயந்து போன சுனில் குமார் அந்த நபர் கூறிய வங்கிக் கணக்குகளுக்கு, பல்வேறு தவணைகளில் 2.21 கோடி ரூபாய் பணம் அனுப்பினார்.
ஆனாலும் தொடர்ந்து அவரிடம் பணம் கேட்டு மிரட்டினர். சந்தேகம் அடைந்தவர், மடிகேரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
பின், புகார் பெங்களூரில் உள்ள சி.ஐ.டி., சைபர் கிரைமுக்கு மாற்றப்பட்டது. விசாரணையில் சுனில் குமாரை மிரட்டி பணம் பறித்தது தெரிந்தது.
இதில் தொடர்புடைய முகமது சாஹிப், முகமது அயன், அசன் அன்சாரி, சாலமன் ராஜா, யூசுப் ஆகிய ஐந்து பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் 30 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள். கைதானவர்களிடம் இருந்து 1.70 கோடி ரூபாய் ரொக்கம்; பென்ஸ் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

