என்.சி.எல்., நிறுவனத்தில் லஞ்சம் டி.எஸ்.பி., உட்பட 5 பேர் கைது
என்.சி.எல்., நிறுவனத்தில் லஞ்சம் டி.எஸ்.பி., உட்பட 5 பேர் கைது
ADDED : ஆக 20, 2024 01:57 AM
புதுடில்லி, மத்திய பிரதேசத்தில் லஞ்ச, ஊழல் புகாரில், சி.பி.ஐ., ஊழல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி., உட்பட ஐந்து பேரை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.
நிலக்கரி அமைச்சகத்தின் கீழ், என்.சி.எல்., எனப்படும், 'வடக்கு கோல்பீல்ட்ஸ் லிமிடெட்' என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் தலைமை அலுவலகம், ம.பி.,யின் சிங்ராலி மாவட்டத்தில் உள்ளது.
இந்நிலையில், என்.சி.எல்., நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக, சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதன்படி, சிங்ராலியில் உள்ள என்.சி.எல்., நிறுவனத்தின் முதன்மை மேலாளரின் தனி செயலர் சுபேதார் ஓஜா உள்ளிட்டோரின் வீடுகளில், சி.பி.ஐ., அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர்.
இதே போல், ம.பி.,யின் ஜபல்பூர், உ.பி.,யின் நொய்டாவிலும் சோதனை நடந்தது. சுபேதார் ஓஜா வீட்டில் இருந்து, 3.85 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில், ஜபல்பூரில் உள்ள சி.பி.ஐ., ஊழல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி., ஜாய் ஜோசப் டாம்லே, சுபேதார் ஓஜா, என்.சி.எல்., தலைமை மேலாளர் நிர்வாகத்தில் பணியாற்றிய ஓய்வு பெற்ற லெப்டினன்ட் கர்னல் பசந்த் குமார் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், சிங்ராலியில் உள்ள சங்கம் இன்ஜினியரிங் நிறுவனத்தின் இடைத்தரகர் மற்றும் இயக்குனரான ரவிசங்கர் சிங், அவரது கூட்டாளி திவேஷ் சிங் ஆகியோரையும், சி.பி.ஐ., கைது செய்தது.
கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும், வரும் 24 வரை காவலில் எடுத்து விசாரிக்க, சி.பி.ஐ.,க்கு ஜபல்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

