ADDED : மே 04, 2024 11:06 PM
பெலகாவில்: வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக மிருணாள் ஹெப்பால்கர் ஆதரவாளர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடகாவில் இரண்டாம் கட்டமாக பெலகாவி உட்பட 14 லோக்சபா தொகுதிகளுக்கு வரும் 7 ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. இத்தொகுதியில் பா.ஜ.,வின் ஜெகதீஷ் ஷெட்டரும்; காங்கிரசின் மிருணாள் ஹெப்பால்கரும் போட்டியிடுகின்றனர்.
பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், கோகாக்கின் அங்கலா கிராமத்தில் வீடு வீடாக வாக்காளர்களுக்கு 1,000 ரூபாய் வினியோகம் செய்யப்படுவதாக, பா.ஜ.,வினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக பா.ஜ.,வினர் அங்கு சென்றனர். அவர்களை பார்த்து பணம் வினியோகித்தவர்கள், தப்பியோட முயற்சித்தனர். ஆனால் பா.ஜ.,வினர் அவர்களை விரட்டிச் சென்று சுற்றி வளைத்தனர்.
பிடிபட்டவர்களில் கடந்த சட்டசபை தேர்தலில் கோகாக்கில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோற்ற மஹந்தேஷ் கடாடி, பத்ராவதியை சேர்ந்த இருவர், ஹர்ஷா சுகர் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் இரு ஊழியர்கள் என ஐந்து பேர் என்பது தெரியவந்தது.
அவர்களையும், அவர்கள் வைத்திருந்த 20 லட்சம் ரூபாய் ரொக்கத்தையும் போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர்.