ஜம்மு - காஷ்மீரில் என்கவுன்டர் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு - காஷ்மீரில் என்கவுன்டர் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ADDED : செப் 14, 2024 11:18 PM
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில், கடந்த 24 மணி நேரத்திற்குள் ஐந்து பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு - காஷ்மீரில், சட்டசபை தேர்தல், வரும் 18, 25 மற்றும் அக்., 1ம் தேதி என மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளன.
இதையொட்டி பிரதமர் மோடி உட்பட அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரங்கள் மேற்கொண்டுள்ளனர். தேர்தல் நடவடிக்கைகளை சீர்குலைக்கும் வகையில் ஜம்மு - காஷ்மீர் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் பயங்கரவாதிகள் ஊடுருவி, அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
பாரமுல்லா மாவட்டத்தின் பட்டான் பகுதி யில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் ராணுவ வீரர்களுடன் இணைந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது, ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி சுடத் துவங்கினர். இதைத்தொடர்ந்து, நம் வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அவர்கள் பதுக்கி வைத்திருந்த கைத்துப்பாக்கி, கையெறி குண்டுகள் போன்ற ஆயுதங்களையும் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் ஜம்மு - காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது, நேற்று முன்தினம் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதேபோல், கிஷ்துவார் மாவட்டத்தில் உள்ள சத்ரு பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த நான்கு வீரர்கள் படுகாயமடைந்தனர்.
இதில், இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதை தொடர்ந்து கிஷ்துவார், உதம்பூர், பூஞ்ச், ரஜோரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.