ADDED : மே 30, 2024 06:39 AM

பெங்களூரு: பெங்களூரில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தாத 5,063 கட்டடங்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில், காவிரி ஆறு முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால், கே.ஆர்.எஸ்., அணை நீர்மட்டம் குறைந்தது.
இதனால் காவிரி ஆற்றின் மூலம், பெங்களூருக்கு குடிநீர் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது. டேங்கர் தண்ணீரை அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு, நகர மக்கள் தள்ளப்பட்டனர்.
பெங்களூரில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண, குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர், பல முயற்சிகள் எடுத்து வருகிறார். தண்ணீர் பிரச்னையை தவிர்க்கும் வகையில், மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்க வேண்டும் என, கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு, குடிநீர் மற்றும் வடிகால் வாரியம், 2016ல் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்நிலையில், பெங்களூரு நகரில் உள்ள, மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 8,404 கட்டடங்கள் உரிமையாளர்கள் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை, முறையாக செயல்படுத்தியது தெரிந்தது.
அதே நேரம் 5,063 கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்தப்படவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த கட்டடங்களின் குடிநீர் இணைப்பை துண்டித்து, குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் நடவடிக்கை எடுத்து உள்ளது.