20 ஆண்டுகளில் 51 ஆயிரம் பேர்; பதற வைக்கும் புள்ளிவிவரம்; வெளியிட்டது ரயில்வே!
20 ஆண்டுகளில் 51 ஆயிரம் பேர்; பதற வைக்கும் புள்ளிவிவரம்; வெளியிட்டது ரயில்வே!
ADDED : ஆக 29, 2024 08:19 AM

மும்பை: மும்பையில் மட்டும் கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் ரயில் விபத்துக்களில் 51 ஆயிரம் பேர் உயிரிழந்திருப்பதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பொதுநல மனு
புறநகர் ரயில்களின் மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மும்பை ஐகோர்ட்டில் யதின் ஜாதவ் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். ரயில் வழித்தடங்களை மாற்றுவதில் ஏற்படும் சிக்கல்களால், கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் என ஒரு நாளுக்கு 5 பேர் உயிரிழப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
அறிக்கை
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மேற்கு ரயில்வே நிர்வாகத்தின் பாதுகாப்பு ஆணையர் சந்தோஷ் குமார் சிங் ரத்தோர் அறிக்கை ஒன்றை கோர்ட்டில் சமர்ப்பித்தார். அதில், பயணிகளின் முழு ஒத்துழைப்பு இல்லாமல், எங்களின் எந்த நடவடிக்கையும் நிவர்த்தியடையாது. காலை, மாலையில் பொதுமக்கள் அதிகம் பயணிக்கும் நேரங்களில் 3 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது.
எண்ணிக்கை
மழை காலங்களில் 86 இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும். அப்போது, ரயில்களை இயக்குவது பெரிதும் சிரமமாகும். இதனால், ரயில்கள் தாமதம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். ரயில்வேறு துறையின் நடவடிக்கையினால் நாளுக்கு நாள் ரயில்களினால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்து கொண்டுதான் வருகிறது. கடந்த 2016ல் 1,084 பேர் உயிரிழந்தனர். 1,517 பேர் படுகாயமடைந்திருந்தனர். தற்போது, 2023ல் பலி எண்ணிக்கை 936ஆகவும், காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 984 ஆகவும் குறைந்துள்ளது.
பார்க்கிங் வசதி இல்லாத இரு ரயில் நிலையங்களை தவிர்த்து, அனைத்து ரயில் நிலையங்களிலும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 2005 முதல் 2024 ஜூலை வரையில் 22,481 பேர் உயிரிழந்துள்ளனர். 26.572 பேர் காயமடைந்துள்ளனர், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
51 ஆயிரம்
அதேபோல, மத்திய ரயில்வே தாக்கல் செய்த அறிக்கையில், பெரும்பாலான குடிசைப் பகுதிகள் ரயில்வே தண்டவாளத்தை ஒட்டியே இருக்கின்றன. தேவையில்லாத கழிவுகளை தண்டவாளத்தில் வீசிச் செல்வதனால் ஏற்படும் விபத்துகளினால் ரயில்களை இயக்குவதில் தாமதம் ஏற்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளில் உயிரிழப்புகளை குறைத்துள்ளோம். அதேவேளையில், ரயில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம். 2009 முதல் 2024 ஜூன் வரையில் 29,321 பேர் உயிரிழந்துள்ளனர், எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம், கடந்த 20 ஆண்டுகளில் மும்பையில் மேற்கு மற்றும் மத்திய ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மட்டும், ரயில்களினால் 51 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
கோரிக்கை
எனவே, அலுவலக ஊழியர்களுக்கான வேலைநேரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவும், ரயில்வே தண்டவாளங்களை ஒட்டியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மஹாராஷ்டிரா அரசுக்கு உத்தரவிட வேண்டும் என, ரயில்வே நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.