ADDED : ஆக 05, 2024 09:51 PM

உடுப்பி மாவட்டம், கார்காலா அருகில் வைணவ கோவில்கள் எதுவும் இல்லை. கோவா அருகில், 'ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில்' மட்டுமே இருந்தது. 550 ஆண்டுகளுக்கு முன், கோவாவில் இருந்து உடுப்பிக்கு சோமசர்மா என்பவர், தன் குடும்பத்துடன் இடம் பெயர்ந்தார்.
அப்போது இப்பகுதியை ஆட்சி செய்த ராஜாவிடம், கோவில் கட்ட அவர் விருப்பம் தெரிவித்தார்; ராஜாவும் நிலம் வழங்கினார். அவ்வூர் மக்களும் இணைந்து கோவில் கட்ட உதவினர். 1500ம் ஆண்டு கோவிலுக்குள் கொள்ளை கும்பல் நுழைந்தது. இதனால், விக்ரஹங்கள், விலை மதிப்புள்ள பொருட்களை காப்பாற்றுவதற்காக, முல்கி அருகிலுள்ள கிணற்றில், அர்ச்சகர்கள் வீசினர்.
கிணற்றில் மீட்பு
நிலைமை சீரான பின், சுவாமி விக்ரஹங்களை தவிர, மற்ற பொருட்கள் மீட்கப்பட்டன. ஒரு நாள் அவ்வழியாக சென்ற ஒரு நபர், கிணற்றில் சுவாமி விக்ரஹங்களை பார்த்து ஆச்சரியம் அடைந்தார். உடனே முல்கி ஊர் மக்களிடம் கூறி, விக்ரஹத்தை மீட்டு, 'ஸ்ரீ வீரவிட்டலா கோவில்' கட்டப்பட்டது.
இதை கேள்விப்பட்ட கார்காலா மக்கள், இறைவன் முல்கியில் இருக்க விரும்புகிறார். அதனால் தான் அங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது என நம்பினர்.
சில நாட்களுக்கு பின், கார்காலாவை சேர்ந்த சிலரது கனவில் தோன்றிய சுவாமி, 'சில நாட்களுக்கு பின் சன்னியாசி ஒருவர் வருவார், அவர், உங்களிடம் மற்றொரு சுவாமி விக்ரஹத்தை சமர்ப்பிப்பார்' என கூறினார்.
கிழக்கு திருப்பதி
இதையடுத்து, சில நாட்களுக்கு பின், திருப்பதியை சேர்ந்த சன்னியாசி ஒருவர், கார்காலாவுக்கு வந்து, அம்மக்களிடம் சுவாமியின் விக்ரஹத்தை வழங்கினார்.
அத்துடன் ஆண்டுதோறும், சுவாமி விக்ரஹத்தை கங்கை நதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்; மக்களும் ஏற்றுக் கொண்டனர். அந்த விக்ரஹம் தான், இங்குள்ள வெங்கடேஸ்வர கோவிலில் அருள்பாலித்து வருகிறார்.
ஆண்டுதோறும் நடக்கும் விழாவில் தங்க பல்லக்கில் வன போஜனைக்காக, ஸ்ரீ வெங்கடேஸ்வரா திருவீதி உலா புறப்படுவார். கார்காலாவின் கிழக்கு திசையில் கோவில் இருப்பதால், இக்கோவிலை கிழக்கு திருப்பதி கோவில் என்றும் அழைக்கின்றனர். விழாவின் போது மட்டுமே, உற்சவர் கோவிலில் இருந்து வெளியே அழைத்து வரப்படுவார். அப்போது லட்ச தீப உற்சவம் நடக்கும்.
இதற்காக சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகை தருவர். திருமலையில் நடக்கும் அனைத்து சேவைகள், பூஜைகள் இங்கும் நடக்கின்றன. தினமும் காலை 6:00 முதல் மதியம் 1:00 மணி வரையிலும்; மாலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
� சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீவெங்கடேஸ்வர சுவாமி. � கோவில் முகப்பு. � கோவிலில் தீபம் ஏற்றி வழிபடும் பெண்கள்.
- நமது நிருபர் -