5, 8, 9ம் வகுப்பில் 'ஆல் பாஸ்!' அரசு உத்தரவால் மாணவர்கள் நிம்மதி
5, 8, 9ம் வகுப்பில் 'ஆல் பாஸ்!' அரசு உத்தரவால் மாணவர்கள் நிம்மதி
ADDED : மே 21, 2024 06:17 AM
பெங்களூரு: கர்நாடகாவில் 5, 8, 9ம் வகுப்புகளின் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவதாக, அரசு அறிவித்துள்ளது.
கர்நாடகாவில், 2023 - 24 கல்வி ஆண்டு முதல் 5, 8, 9 மற்றும் பி.யு.சி., முதலாம் ஆண்டு வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வு நடத்துவதற்கு, கர்நாடக அரசு முடிவு செய்தது. அதன்படி, 5, 8, 9ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது.
இதற்கு, தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவித்தது. உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என மாறி மாறி வழக்கு தொடர்ந்தது. இறுதியாக கடந்த மார்ச்சில் தேர்வு நடந்தது. வழக்கின் காரணமாக பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு, ஏப்ரல் 8ம் தேதி உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
நாளை திறப்பு
இதனால், மாணவர்களும், பெற்றோரும் பெரும் கவலையில் இருந்தனர். தற்போது கர்நாடகாவில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை உள்ளது. மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பெரும்பாலான தனியார் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், நாளை திறக்கப்பட உள்ளன. அரசு பள்ளிகள், வரும் 29ம் தேதி திறக்கப்படுகின்றன.
ஆனால், 5, 8, 9 மற்றும் பி.யு.சி., முதலாம் ஆண்டு வகுப்புத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படாததால், அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சி பெற செய்வது எப்படி; மதிப்பெண் போடுவது எப்படி; வேறு பள்ளிக்கு செல்வோருக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்குவது எப்படி; கல்விக் கட்டணம் செலுத்துவது எப்படி என்பது குறித்து, மாணவர்கள், பெற்றோர், பள்ளி நிர்வாகங்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
அரசு உத்தரவு
இதற்கிடையில், கர்நாடக பள்ளி கல்வி துறை கமிஷனர் காவேரி நேற்று பிறப்பித்த புதிய உத்தரவு:
கர்நாடகாவின் 5, 8, 9ம் வகுப்புகளுக்கு நடத்தப்பட்ட பொதுத்தேர்வுகளின் முடிவு வெளியிடுவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. 2023 - 24 கல்வி ஆண்டு முடிந்துவிட்டது.
சான்றிதழ் வழங்குதல்
மே 29ம் தேதி முதல், 2024 - 25 கல்வி ஆண்டு ஆரம்பமாகிறது. இதனால், கடந்த ஆண்டின் 5, 8, 9ம் வகுப்புகளின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாததால், கல்விக் கட்டணம் வசூலித்தல், புதியவர்களை சேர்த்தல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட பல செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே மாணவர்களின் எதிர்கால கல்வி நலன் கருதி, 2023 - 24ல் நடத்தப்பட்ட மாதாந்திர தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. அவர்கள் அடுத்த வகுப்புகளுக்குச் செல்லும் நடவடிக்கை துவங்கும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசின் புதிய உத்தரவு மூலம், மாணவர்கள், பெற்றோர், பள்ளி நிர்வாகங்களும் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர். பி.யு.சி., முதலாம் ஆண்டுக்கு இன்னும் தேர்வு நடத்தப்படவில்லை.

