ஹிமாச்சலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 6 எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வில் ஐக்கியம்
ஹிமாச்சலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 6 எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வில் ஐக்கியம்
ADDED : மார் 24, 2024 01:31 AM

புதுடில்லி,: ஹிமாச்சல பிரதேசத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஆறு பேர் மற்றும் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த மூன்று சுயேச்சைகள் உட்பட ஒன்பது எம்.எல்.ஏ.,க் களும் பா.ஜ.,வில் இணைந்தனர்.
ஹிமாச்சலில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது.
இங்கு கடந்த மாதம் நடந்த ஒரு ராஜ்யசபா இடத்துக்கான தேர்தலில் காங்., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் ஆறு பேர், மூன்று சுயேச்சைகள் கட்சி மாறி ஓட்டளித்ததால் பா.ஜ., வேட்பாளர் ஹர்ஸ் மகாஜன் வெற்றி பெற்றார்.
சட்டசபையில் கட்சி கொறடா உத்தரவை மீறி ஓட்டளித்த ஆறு காங்., - எம்.எல்.ஏ.,க்களும் கட்சி தாவல் சட்டத்தின் கீழ் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதனால் 62 பேர் கொண்ட சட்டசபையில், 39 ஆக இருந்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பலம் 33 ஆக குறைந்தது.
இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சுதிர் சர்மா, ரவி தாகூர், ராஜிந்தர் ரானா, இந்தர் தத் லக்கன்பால், சேத்தன்ய சர்மா, தேவிந்தர் குமார் புட்டோ ஆகிய ஆறு காங்கிரஸ் எம். எல்.ஏ.,க்கள் மற்றும் ராஜினாமா செய்த சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் மூன்று பேர் என மொத்தம் ஒன்பது எம்.எல்.ஏ.,க்களும் நேற்று டில்லியில் பா.ஜ.,வில் இணைந்தனர்.
மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர், முன்னாள் முதல்வர் ஜெய்ராம் தாக்குர், பா.ஜ., தேசிய செயலர் அருண் சிங் ஆகியோர் முன்னிலையில் அவர்கள் பா.ஜ.,வில் இணைந்தனர்.

