ADDED : மே 22, 2026 11:51 PM
கஞ்சம்: ஒடிஷாவில், பயணியரை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது பஸ் மோதியதில், இரு சிறுமியர் உட்பட ஆறு பேர் பலியாகினர்.
ஒடிஷாவில் கஞ்சம் மாவட்டத்தின் எரேந்திரா பகுதியைச் சேர்ந்த, 10 பேர், அதே மாவட்டத்தில் உள்ள சிங்கசனி கோவிலுக்கு வழிபட ஆட்டோவில் நேற்று சென்றனர். புருஷோத்தம்பூர் பகுதியில் உள்ள லட்கப்பள்ளி சந்திப்பு அருகே சென்ற போது, பெர்ஹாம்பூரில் இருந்து புருஷோத்தம்பூர் நோக்கி வந்த பஸ், ஆட்டோ மீது வேகமாக மோதியது. இதில், சில மீட்டர் துாரம் ஆட்டோ இழுத்துச் செல்லப்பட்டது.
இதில் பயணித்தவர்கள் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர். மருத்துவமனையில் மேலும் மூன்று பேர் உயிரிழந்தனர். விபத்தில், இரண்டு சிறுமியர் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். நான்கு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். விபத்து நடந்த பகுதியில் இருந்த பஸ் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்தி தப்பியோடிய பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.
