விளையாட்டு நகரம் அமைக்க எலஹங்காவில் 60 ஏக்கர் தேர்வு
விளையாட்டு நகரம் அமைக்க எலஹங்காவில் 60 ஏக்கர் தேர்வு
ADDED : ஆக 22, 2024 04:05 AM
பெங்களூரு; பெங்களூரின் எலஹங்காவில், விளையாட்டு நகரம் அமைக்க, 11 ஆண்டுகளுக்கு பின், 60 ஏக்கர் கண்டறியப்பட்டு உள்ளது.
உலகம் முழுதும் விளையாட்டு நகரம் அங்கீகாரம் பெற்று வருகிறது. இதுபோன்று, ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட பெங்களூரில் விளையாட்டு வீரர்கள் வசதிக்காக, அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு நகரம் உருவாக்க திட்டமிடப்பட்டது.
இதற்காக 2013ல் அப்போதைய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் அபய் சந்திர ஜெயினிடம் கர்நாடக ஒலிம்பிக் அமைப்பு, பல்வேறு விளையாட்டு சங்கங்கள் சார்பில் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.
சிக்கபல்லாபூர், மைசூரு சாலை, கோலார் அருகில் விளையாட்டு நகரம் உருவாக்க நிலம் கண்டறிய முடிவு செய்யப்பட்டது. ஆனால், நிலம் கையகப்படுத்துதல் உட்பட பல காரணங்களால் நிறைவேற்ற முடியவில்லை.
இந்நிலையில், 2024 - 25 பட்ஜெட்டில் மாநில அரசு, விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என அறிவித்தது. அதன்படி, எலஹங்காவில் மாவல்லிபுரத்தில் 60 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு உள்ளது. விளையாட்டு நகரம் அமைப்பதற்கு தகுந்த செயல் திட்டத்தை தயாரித்து, செயல்படுத்த அரசு ஏற்கனவே கொள்கை ரீதியான ஒப்புதல் அளித்துள்ளது.
இத்திட்டத்திற்காக ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட நிலத்தை, இளைஞர் நலம், விளையாட்டு துறையிடம் ஒப்படைக்க, வருவாய் துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
என்ன இருக்கும்?
விளையாட்டு நகரத்தில் உள், வெளி விளையாட்டுகளுக்கான வசதிகள் இருக்கும். தடங்கள், உபகரணங்கள், பயிற்சி மையம், உடற்பயிற்சி அரங்கு, விளையாட்டுகளின் கலாசாரம் உட்பட பல்வேறு விளையாட்டுகளுக்கு தேவையான தொழில்நுட்பம், விளையாட்டு தொடர்பான அனைத்தும் அறிந்து கொள்ளும் வகையில் அமைய உள்ளது.
விளையாட்டு நகரத்துக்கான இடம் 11 ஆண்டுகளுக்கு பின் கண்டறியப்பட்டு, திட்டத்தை செயல்படுத்தும் பணி துவங்கி உள்ளன.
கடந்த 2013ல் விளையாட்டு நகரம் அமைக்க, அப்போதைய அரசிடம் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது. அதன்பின், தொடர்ந்து இதை அரசை அணுகி வந்தேன். விளையாட்டு நகரங்கள் கட்டும் பணி மீண்டும்துவங்க இருப்பது நல்லது.
கோவிந்தராஜு,
தலைவர், கர்நாடக ஒலிம்பிக் அமைப்பு