போலீஸ் ஸ்டேஷனில் கேட்பாரின்றி கிடக்கும் 60,000 கிலோ பாக்கு
போலீஸ் ஸ்டேஷனில் கேட்பாரின்றி கிடக்கும் 60,000 கிலோ பாக்கு
ADDED : மார் 05, 2025 04:14 AM
சில்சார்; அசாமின் லக்பூர் போலீஸ் ஸ்டேஷனில், 60,000 கிலோ பாக்கு மூட்டைகள் கேட்பாரற்று கிடக்கின்றன. இரண்டு ஆண்டுகளாக பல முறை பொதுப்படையாக அழைப்பு விடுத்தும் அதை எடுத்துச் செல்ல யாரும் வராததால், அவை கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அசாமில், பா.ஜ.,வைச் சேர்ந்த ஹிமந்த பிஸ்வ சர்மா முதல்வராக உள்ளார். இங்குள்ள கச்சார் மாவட்டத்தில் போலீசார் நடத்திய வாகன சோதனைகளின் போது, 2024 அக்டோபரில் 27,000 கிலோ; 2023ல், 33,000 கிலோ பாக்கு மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.
அவற்றை லக்பூர் போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்று பத்திரமாக வைத்துள்ளனர்.
இதனால், போலீஸ் நிலையத்தின் பெரும்பான்மையான இடம் அடைபட்டதே தவிர, அவற்றின் உரிமையாளரை கண்டுபிடிக்க முடியவில்லை.
உரிய ஆவணங்களை காட்டி, அந்த பாக்கு மூட்டைகளை எடுத்துச் செல்லலாம் என, பலமுறை பொதுப்படையாக அழைப்பு விடுத்தும், யாரும் வரவில்லை. இதையடுத்து, அந்த பாக்கு மூட்டைகள் சட்ட விரோத கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என நம்பும் போலீசார், அதுகுறித்து விசாரிக்கின்றனர்.