கோலார் தொகுதியில் மின்னணு இயந்திரங்கள் மூன்று அடுக்கு கண்காணிப்பில் 61 கேமராக்கள்
கோலார் தொகுதியில் மின்னணு இயந்திரங்கள் மூன்று அடுக்கு கண்காணிப்பில் 61 கேமராக்கள்
ADDED : ஏப் 27, 2024 11:10 PM

கோலார்: ''கோலார் லோக்சபா தேர்தலில் ஓட்டுப் பதிவு செய்யப்பட்ட மின்னணு இயந்திரங்கள் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் 14 அறைகளில் வைக்கப்பட்டுள்ளது. கட்டடத்தை சுற்றி 61 கண்காணிப்பு கேமராக்கள், 24 மணி நேரமும் இயங்கும், 8 சுழலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன,'' என, கோலார் மாவட்ட கலெக்டர் அக்ரம் பாஷா தெரிவித்தார்.
கோலாரில் அவர் அளித்த பேட்டி:
ஜில்லா பஞ்சாயத்து செயலர், 20 ஆயிரம் அரசு ஊழியர்கள், 2 எஸ்.பி.,கள் தலைமையில் 7,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். சிறு அசம்பாவித சம்பவங்கள் கூட ஏற்படாதவாறு மிக அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடந்தது.
கர்நாடகாவில் கோலாரில் ஓட்டுப்பதிவு அதிகரிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் இத்தொகுதியில் 78.26 சதவீதம் ஓட்டுப்பதிவானது.
எட்டு சட்டசபைத் தொகுதிகள் கொண்ட கோலார் லோக்சபா தேர்தலில் ஓட்டுப் பதிவு செய்யப்பட்ட 2,060 ஓட்டுச்சாவடிகளின் மின்னணு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
கோலாரில் உள்ள அரசு இளநிலை கல்லுாரியில் பலத்த பாதுகாப்புடன் 14 அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.
இதற்காக மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீஸ், சிவில் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 61 கண்காணிப்பு கேமராக்கள், கட்டடங்கள் சுற்றி 24 மணி நேரமும் இயங்கும், 8 சுழலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடக்கிறது. அன்று காலை 7:00 மணிக்கு தான், சீல் வைத்த அறையை தேர்தல் மேற்பார்வையாளர்கள் முன்னிலையில் திறக்கப்படும். அன்று காலை 8:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை ஆரம்பமாகும்.
நேற்று முன்தினம் நடந்த ஓட்டுப் பதிவின்போது, ஆறு மின்னணு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. அவை உடனடியாக மாற்றப்பட்டன. மூன்று கன்ட்ரோல் யூனிட் பழுதாகின. அவையும் உடனடியாக மாற்றப்பட்டன. ஓட்டுப் பதிவுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

