ஜனநாயக நாட்டில் 66% ஓட்டுப்பதிவு சிறந்தது தான்: தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் மகிழ்ச்சி
ஜனநாயக நாட்டில் 66% ஓட்டுப்பதிவு சிறந்தது தான்: தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் மகிழ்ச்சி
ADDED : மே 05, 2024 06:03 PM

புதுடில்லி: 'கடந்த இரண்டு கட்ட ஓட்டுப்பதிவும் குறைந்த அளவில் பதிவாகவில்லை. ஜனநாயக நாட்டில் 66 சதவீதத்திற்கு மேலான ஓட்டுப்பதிவு என்பது சிறந்தது தான்' என இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் கூறியுள்ளார்.
புதுடில்லியில் இன்று சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: மே 7ம் தேதி மூன்றாம் கட்ட லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் குடிநீர் மற்றும் அத்தியாவசிய ஏற்பாடுகளை செய்துள்ளோம். மக்களுக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பதை நினைவூட்டும் வகையில் எஸ்.எம்.எஸ்., அனுப்புகிறோம்.
66 சதவீதம்
கடந்த இரண்டு கட்ட ஓட்டுப்பதிவும் குறைந்த அளவில் பதிவாகவில்லை. ஜனநாயக நாட்டில் 66 சதவீதத்திற்கு மேலான ஓட்டுப்பதிவு என்பது சிறந்தது தான். நிச்சயமாக, மூன்றாம் கட்ட தேர்தல் 66 சதவீதத்திற்கு அதிகமாக ஓட்டுகள் பதிவாகும். எங்கள் அழைப்பின் பேரில், 23 நாடுகளைச் சேர்ந்த 75க்கும் மேற்பட்ட சர்வதேச பார்வையாளர்கள் தேர்தல் பிரசாரங்களை காண வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும், திருப்தியையும் அளிக்கிறது. அவர்கள் இந்தியாவில் ஜனநாயக திருவிழா எப்படி வெளிப்படையாகக் கொண்டாடப்படுகிறது என்பதைப் பார்க்க வந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.