ADDED : மார் 29, 2024 11:00 PM
தார்வாட்: ஒரே நாளில் மூன்று வெவ்வேறு இடங்களில் ஆவணங்களின்றி கொண்டு சென்ற ஆறு லட்சம் ரூபாய் ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் திவ்யா பிரபு வெளியிட்டுள்ள அறிக்கை:
லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்ட மார்ச் 16ம் தேதி முதல் மாவட்டத்தில் 24 இடங்களில் வாகன சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவ்வழியாக செல்லும் வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக சந்தேகப்படும்படியான வாகனங்களை அதிகாரிகள் நிறுத்தி, தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிகள் மீறியதாகவும், முறையான ஆவணங்கள் இல்லாததாலும், இதுவரை 17 லட்சத்து 91 ஆயிரத்து 970 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு, மாவட்ட கருவூலத்தில் டிபாசிட் செய்யப்பட்டு உள்ளது.
இதில், வியாழன் (நேற்று முன்தினம்) முதல் வெள்ளிக்கிழமை (நேற்று) வரை ஷெரவாடா, சங்கதிகொப்பா, குருவி ஆகிய மூன்று வாகன சோதனைச்சாவடிகளில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட மொத்தம், 6 லட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
