ADDED : ஆக 03, 2024 11:03 PM
மாதநாயக்கனஹள்ளி: நகைக்கடை உரிமையாளர், ஊழியர்களிடம் துப்பாக்கி முனையில் நகைகளை கொள்ளையடித்த வழக்கில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு ரூரல் மாதநாயக்கனஹள்ளி அருகே டோம்பரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜு, 45. நகைக்கடை நடத்துகிறார். கடந்த ஜூன் 26ம் தேதி இரவு 10:00 மணிக்கு ராஜுவும், இரண்டு ஊழியர்களும் கடையில் இருந்தனர்.
அப்போது மூகமுடி அணிந்து கடைக்குள் புகுந்த ஏழு பேர் கும்பல், ராஜு, நகைக்கடை ஊழியர்களை துப்பாக்கியை காண்பித்து மிரட்டினர்.
கல்லா பெட்டியில் இருந்த இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கம், 315 கிராம் நகைகளை கொள்ளை அடித்துவிட்டுத் தப்பினர்.
கொள்ளையர்களை பிடிக்க நெலமங்களா டி.எஸ்.பி., ஜெகதீஷ் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டது. கண்காணிப்பு கேமரா காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன.
நகைக்கடையில் கொள்ளையடித்ததாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், ஜோத்பூரைச் சேர்ந்த நாராயண் லால், 43, ராம் லால், 54, கிஷோர் பவார், 25, மகேந்திர கெலாட், 25, கீர்த்தராம், 42, அசோக்குமார், 39, சோகன் ராம், 32, ஆகிய ஏழு பேரை, மாதநாயக்கனஹள்ளி போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் அனைவரும் பெங்களூரில் நகை, துணிக் கடைகள், ரசாயனம் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்தது தெரிந்தது.
கைதானவர்களிடம் இருந்து 35 லட்ச ரூபாய் ரொக்கம், 417 கிராம் தங்க நகைகள், ஒரு கைத்துப்பாக்கி, ஒரு ஆட்டோ, ஒரு பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.