வௌ்ளத்தில் மிதக்கும் குஜராத் 7 பேர் பலி; 6,000 பேர் வெளியேற்றம்
வௌ்ளத்தில் மிதக்கும் குஜராத் 7 பேர் பலி; 6,000 பேர் வெளியேற்றம்
ADDED : ஆக 28, 2024 02:22 AM

ஆமதாபாத், குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்யும் மழையால் ஏற்பட்ட விபத்துகளில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் தவித்த 6,000 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுஉள்ளனர்.
குஜராத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று முன்தினம் பெய்த கனமழையால் பஞ்ச்மஹால், காந்திநகர், கேதா, வதோதரா, பரூச், நவ்சாரி, வால்சத் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து, வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
ஆறுகள், அணைகளில் நீர்மட்டம் உயர்ந்ததால் கரையோர பகுதிகளில் வசித்த 6,000க்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
விஸ்வமித்ரி ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுத்ததால் வதோதரா நகரின் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
நேற்று முன்தினம் மட்டும் மழை தொடர்பான சம்பவங்களால் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
மோர்பி மாவட்டத்தின் தங்கரா தாலுகாவில் நேற்று காலை 6:00 மணியுடன் முடிவடைந்த முந்தைய 24 மணி நேரத்தில், 34.7 செ.மீ., மழை பதிவானது.
இது மாநிலத்தில் பெய்த அதிகபட்ச மழைப்பொழிவு என, இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் மேலும் கூறியிருப்பதாவது:
நேற்று ராஜ்கோட் நகரில் மழை வெளுத்து வாங்கியது. காலையில் நான்கு மணி நேரத்தில் இங்கு 14.2 செ.மீ., மழை பதிவானது. மாநிலத்தில், 96 அணைகள் நிரம்பி அபாய அளவை தாண்டி நீர் பாய்கிறது. இதையடுத்து கரையோர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.