ADDED : ஆக 05, 2024 12:45 AM

இட்டாவா: டில்லியில் இருந்து உத்தர பிரதேசத்தின் ரேபரேலி நோக்கி நேற்று அதிகாலை 60 பயணியருடன் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தின் பதிவெண் கொண்ட பஸ் ஒன்று வந்தது.
லக்னோ - ஆக்ரா விரைவுச்சாலையின் இட்டாவா பகுதி அருகே அந்த பஸ் வந்தபோது, எதிரே வந்த கார் மீது மோதியது.
இதில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரம் இருந்த 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து வந்த போலீசார், மீட்புக்குழுவினரின் உதவியுடன் பஸ்சில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல் விபத்தில் காரும் சேதமடைந்த நிலையில், அதில் வந்தவர்களையும் மீட்டனர். இந்த விபத்தில் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இவர்களில் நான்கு பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. மற்ற மூவரின் அடையாளங்களை காணும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில், 25 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
உ.பி.,யின் கன்னோஜ் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தார், ராஜஸ்தானில் மெஹந்திபூர் கோவிலில் வழிபாடு செய்தபின் தங்கள் காரில் சொந்த ஊருக்கு திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது.
பஸ் டிரைவர் மொபைல் போனில் பேசியபடி வாகனத்தை ஓட்டியதும் கண்டறியப்பட்டுள்ளது.