ADDED : ஆக 13, 2024 01:11 AM
ஜெகனாபாத், பீஹாரில், பாபா சித்தேஷ்வர் நாத் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, ஆறு பெண்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.
பீஹார் மாநிலம் ஜெகனாபாத் மாவட்டத்தின் பராபர் பஹாடி என்ற பகுதி யில் உள்ள பாபா சித்தேஷ்வர் நாத் கோவிலில், நேற்று முன்தினம் நள்ளிரவில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதில், ஆறு பெண்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர். மேலும், 16 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் கன்வர் யாத்திரை பக்தர்கள் என கூறப்படுகிறது.
தகவலறிந்த மீட்புப் படையினர், காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களில், 10 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், ஆறு பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் நிதீஷ் குமார், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு தலா 50,000 ரூபாயும் வழங்க உத்தரவிட்டார்.
இது குறித்து, கலெக்டர் அலங்கிரிதா பாண்டே கூறுகையில், “கோவிலுக்கு வெளியே கன்வர் யாத்திரை பக்தர்களுக்கும், பூ வியாபாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
''இந்த தகராறு காரணமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்கலாம் என, சந்தேகிக்கிறோம். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் கூட்ட நெரிசலுக்கான உண்மையான காரணம் தெரிய வரும்,” என்றார்.