ADDED : செப் 14, 2024 01:32 AM
சித்துார், ஆந்திராவில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற அரசு பஸ், லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், ஏழு பயணியர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் சித்துாரில் இருந்து கர்நாடகாவின் பெங்களூரு நோக்கி நேற்று ஆந்திர மாநில சாலை போக்குவரத்து கழக பஸ், 50க்கும் மேற்பட்ட பயணியருடன் சென்றது.
சித்துார் - பெங்களூரு நெடுஞ்சாலையில் பாலமனேரு அருகே மொகிலி காட் பகுதியில் சென்றபோது எதிரே வந்த லாரி மீது மோதி விபத்தில் சிக்கியது.
இதில், பஸ்சில் சென்ற ஏழு பயணியர் பரிதாபமாக உயிரிழந்தனர்; 10 பேர் காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் விபத்தில் உயிரிழந்த ஏழு பேரின் சடலங்களை மீட்டனர்.
காயம் அடைந்தவர்களை மீட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.