725 கிலோ போதை பொருள் பறிமுதல்: 7 பேர் சிக்கினர் பஞ்சாப் டி.ஜி.பி., தகவல்
725 கிலோ போதை பொருள் பறிமுதல்: 7 பேர் சிக்கினர் பஞ்சாப் டி.ஜி.பி., தகவல்
ADDED : மே 11, 2024 09:25 PM
சண்டிகர்:மாநிலங்களுக்கு இடையே போதைப் பொருள் கடத்தும் கும்பலைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டு, 70.42 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள், 725 கிலோ போதைப்பொருள் மற்றும் 2.37 லட்சம் ரூபாய் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து, பஞ்சாப் மாநில டி.ஜி.பி., கவுரவ் யாதவ் கூறியிருப்பதாவது:
பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம் உத்தர பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு இடையே போதைப் பொருள் கடத்தும் ஏழு பேரை, பஞ்சாப் மாநில சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்துஉள்ளனர்.
தரன் தரன் மாவட்டத்தின் கோட் முஹமதுகான் கிராமத்தைச் சேர்ந்த சுக்விந்தர் சிங் என்ற தாமி, ஜஸ்பிரீத் சிங் ஆகிய இரு கடத்தல்காரர்களைக் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல, அமிர்தசரஸ் கோவிந்த் நகரைச் சேர்ந்த ஜாஸ் என்பவரும் சிக்கினார். அவர்களிடம் நடத்திய விசாரணை அடிப்படையில், உத்தர பிரதேச மாநிலம் சஹரன்பூரைச் சேர்ந்த அலெக்ஸ் பாலிவால் என்ற கடத்தல் கும்பல் தலைவன் பிடிபட்டான்.
மேலும், ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிராவில் உள்ள மருந்து நிறுவனத்துக்கும் இந்தக் கடத்தலில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதிரடிப்படையினர் அங்கும் சென்று அதிரடி சோதனை நடத்தினர். அங்கு இன்டெசார் சல்மானி, பிரின்ஸ் சல்மானி, பல்ஜிந்தர் சிங் மற்றும் சுபா சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்தக் கும்பலிடம் இருந்து 70.42 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள், 725 கிலோ போதைப்பொருள் மற்றும் 2.37 லட்சம் ரூபாய் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.