போராட்டம் முடிந்தும் பலனில்லை 75 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து
போராட்டம் முடிந்தும் பலனில்லை 75 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து
ADDED : மே 11, 2024 01:21 AM

மும்பை : விமான பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக, நேற்றும் 75 விமானங்களின் சேவையை 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' நிறுவனம் ரத்து செய்தது. நாளை முதல் வழக்கம்போல் அனைத்து விமானங்களும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீர் விடுப்பு
ஏர் இந்தியாவின் ஒரு பிரிவாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செயல்பட்டு வருகிறது. 'ஏர் ஏசியா இந்தியா' என்று அழைக்கப்பட்ட, 'ஏ.ஐ.எக்ஸ்., கனெக்ட்' நிறுவனத்தை, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உடன் இணைக்கும் முயற்சியில் டாடா குழுமம் ஈடுபட்டுள்ளது.
இதற்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடந்த 8ம் தேதி திடீர் விடுப்பு எடுத்தனர்.
இதனால், 100க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. நேற்று முன்தினம் 85 விமானங்கள் ரத்தான நிலையில், ஊழியர்கள் சங்கத்தினருடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் பேச்சு நடத்தியது.
இதில் உடன்பாடு ஏற்படவே, தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக நேற்று முன்தினம் ஊழியர்கள் சங்கத்தினர் அறிவித்தனர்.
எனினும், விமான பணியாளர்களின் பற்றாக்குறை காரணமாக நேற்றும், 75 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவித்துள்ளது.
திரும்ப வாய்ப்பு
இது தொடர்பாக அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்ற நிலையில், விமான சேவைகள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகின்றன. எனினும், நாளை முதல் விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளது' என்றார்.