இளம்பெண் கொலையில் கைதான வாலிபருக்கு 8 நாள் போலீஸ் காவல்
இளம்பெண் கொலையில் கைதான வாலிபருக்கு 8 நாள் போலீஸ் காவல்
ADDED : மே 23, 2024 10:25 PM

ஹூப்பள்ளி: ஹூப்பள்ளியில் பரபரப்பை ஏற்படுத்திய, இளம்பெண் அஞ்சலி கொலை வழக்கில், கைதான வாலிபரை, எட்டு நாட்கள், சி.ஐ.டி., காவலில் விசாரிக்க, ஹூப்பள்ளி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
ஹூப்பள்ளியின் பென்டிகேரி வீராபுரா ஓனியில் வசித்தவர் அஞ்சலி, 21. இவரை கடந்த 15ம் தேதி, விஸ்வா 23 என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்தார்.
இரண்டு நாட்களுக்கு பின், கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சி.ஐ.டி., விசாரணைக்கு அரசு ஒப்படைத்தது.
நேற்று முன்தினம் ஹூப்பள்ளி ஜே.எம்.சி., நீதிமன்றத்தின் அனுமதியுடன், விஸ்வாவிடம் சி.ஐ.டி., போலீசார் விசாரித்தனர். 'அஞ்சலிக்கு அடிக்கடி பண உதவி செய்தேன். கடந்த 14ம் தேதி என்னிடம் இருந்து, 'போன்பே' மூலம் 1,000 ரூபாய் வாங்கினார். பின்னர் எனது மொபைல் நம்பரை 'பிளாக்' செய்தார். இதனால் ஏற்பட்ட கோபத்தில் கொன்றேன்' என, விஸ்வா வாக்குமூலம் அளித்து இருந்தார்.
நீதிபதியிடம் கண்ணீர்
இந்நிலையில் விஸ்வாவை, ஹூப்பள்ளி ஜே.எம்.சி., நீதிமன்றத்தில் நேற்று போலீசார் ஆஜர்படுத்தினர். அவரிடம் விசாரிக்க வேண்டி இருப்பதால் 15 நாட்கள், போலீஸ் காவலுக்கு அனுப்பும்படி, சி.ஐ.டி., தரப்பு கேட்டது.
அப்போது நீதிபதி நாகேஷ் நாயக் முன்பு, விஸ்வா கண்ணீர் விட்டு அழுதார். 'அஞ்சலியை தெரியாமல் கொன்று விட்டேன்' என்று கூறினார். இதனால் கடுப்பான நீதிபதி, 'இதை எல்லாம் கொலை செய்யும் முன்பு யோசித்து இருக்க வேண்டும்.
இப்போது கண்ணீர் வடித்து என்ன பயன்' என்று, விஸ்வாவை பார்த்து கேட்டார். இதன்பின், எட்டு நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி, நீதிபதி நாகேஷ் நாயக் உத்தரவிட்டார்.
முன்னாள் காதலன்
இந்நிலையில் நேற்று மதியம் அஞ்சலி வீட்டிற்கு சென்ற சி.ஐ.டி., போலீசார், அஞ்சலியின் தங்கை யசோதாவிடம், விசாரணை நடத்தி தகவல் பெற்று கொண்டனர்.
அஞ்சலிக்கு 17 வயதாக இருந்த போது, விஜய் என்பவரை காதலித்தார். நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலை கைவிட்டார். அஞ்சலி கொலையான நாளில் இருந்து, விஜயை காணவில்லை. அவர் மீதும் எங்களுக்கு சந்தேகம் இருப்பதாக, போலீசாரிடம் அஞ்சலி தங்கை யசோதா கூறி உள்ளார்.