பாய்லர் வெடித்து விபத்து 8 பேர் பலி; 60 பேர் காயம்
பாய்லர் வெடித்து விபத்து 8 பேர் பலி; 60 பேர் காயம்
ADDED : மே 24, 2024 01:20 AM

தானே, மும்பை அருகே உள்ள ரசாயன தொழிற்சாலையில் நேற்று பாய்லர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் தொழிற்சாலை தரைமட்டமானது. இந்த விபத்தில் எட்டு பேர் பலியாகினர். 60 பேர் படுகாயமடைந்தனர்.
மஹாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் டோம்பிவில்லி பகுதி யில் தொழிற்பேட்டை செயல்படுகிறது. இங்கு ஏராளமான தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் அமைந்துள்ளன.
இங்கு உள்ள அமுதன் ரசாயன தொழிற்சாலையில் நேற்று பிற்பகல் பாய்லர் வெடித்து சிதறியது. அடுத்தடுத்து மூன்று முறை பயங்கர வெடி சத்தம் கேட்டது.
இதில் அருகிலுள்ள வீடுகளின் ஜன்னல்கள் நொறுங்கின.
பாய்லர் வெடித்த உடன் தீ பற்றியது. இதில் தொழிற்சாலை முற்றிலுமாக எரிந்து தரைமட்டமானது. மேலும் அருகிலுள்ள இரண்டு நிறுவனங்கள் மற்றும் கார் ஷோரூமிலும் தீ பரவியது.
தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள், 15 வாகனங்களில் வந்து, பல மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். தொழிற்சாலையில் சிக்கிய எட்டு பேரை பத்திரமாக மீட்டனர்.
இருப்பினும் இந்த விபத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர். 60 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொழிற்சாலைக்குள் மேலும் சிலர் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.