பள்ளத்தில் கார் கவிழ்ந்தது ஒரே குடும்பத்தில் 8 பேர் பலி
பள்ளத்தில் கார் கவிழ்ந்தது ஒரே குடும்பத்தில் 8 பேர் பலி
ADDED : ஜூலை 27, 2024 11:51 PM
ஜம்மு: ஜம்மு -- காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில், இரண்டு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் உயிரிழந்தனர்.
காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இம்தியாஸ் அகமது. இவர், இரண்டு குழந்தைகள் உட்பட தன் குடும்பத்தினர் ஏழு பேருடன், 'மாருதி சுசூகி வேகனார்' காரில் கிஸ்த்வார் சென்றுவிட்டு, நேற்று மதியம் அனந்தநாக் திரும்பி கொண்டிருந்தார்.
கொண்டை ஊசி வளைவுகள் நிறைந்த தக்சும் பகுதி அருகே கார் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகி பள்ளத்தில் உருண்டு விழுந்தது.
இதில் கார் முற்றிலுமாக உருக்குலைந்தது. தகவலறிந்து திரண்ட அப்பகுதியினர், காருக்குள் இருந்த எட்டு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் எட்டு பேரும் உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.