ADDED : செப் 07, 2024 12:56 AM
பஹ்ரைச், : உத்தர பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில், ஓநாய் தாக்கியதில், 8 வயது சிறுவன் காயமடைந்தார்.
உ.பி.,யின் பஹ்ரைச் மாவட்டத்தில் கடந்த ஜூலையில் ஓநாய்கள் கூட்டமாக படையெடுத்தன. இதனால் அம்மாவட்ட மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். ஓநாய்கள் தாக்கியதில், ஏழு குழந்தைகள் உட்பட எட்டு பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.
ஓநாய்களை பிடிக்க, வனத்துறையினரும் தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இதுவரை, நான்கு ஓநாய்கள் பிடிபட்ட நிலையில் மீதமுள்ளவற்றை பிடிக்க புதிய நுட்பங்களை வனத்துறையினர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பஹ்ரைச் மாவட்டத்தின் மஹ்சி தெஹ்சில் பகுதியில் உள்ள கோல்வா என்ற கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு, சங்கம் லால், 8, என்ற சிறுவன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது அங்கு வந்த ஓநாய், சிறுவனை தாக்கியது.
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு மக்கள் வந்ததையடுத்து, ஓநாய் அங்கிருந்து தப்பிச் சென்றது.
இந்த தாக்குதலில், சிறுவனுக்கு கழுத்து, கன்னம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த சிறுவனுக்கு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஓநாய்களை விரைவில் பிடிக்க, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.