'பையில் வெடிகுண்டு இருக்கிறது' 81 வயது முதியவர் மீது வழக்கு
'பையில் வெடிகுண்டு இருக்கிறது' 81 வயது முதியவர் மீது வழக்கு
ADDED : ஜூன் 19, 2024 05:11 AM
தேவனஹள்ளி : துபாய்க்கு செல்ல இருந்த 81 வயது முதியவரின் உடைமைகளை சோதிக்கும் போது, வெடிகுண்டு இருப்பதாக கூறியதால், அவர் மீது போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு, அஞ்சனாபுராவை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ், 81. இவர், நேற்று முன்தினம் துபாய் செல்ல, பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார். காலை 10:35 மணிக்கு 'இகே - 565 எமிரேட்ஸ் விமானம்' மூலம் செல்வதாக இருந்தது.
இதற்காக காலை 8:10 மணிக்கே, விமானத்தில் பயணிக்கும் பயணியரின் உடைமைகள் கவுன்டரில் சோதனை செய்யப்பட்டன.
இவரின் பையை சோதனையிடும் போது, 'பையில் என்ன உள்ளது' என ஊழியர்கள் கேட்டனர். அதற்கு கிருஷ்ணராஜ், 'வெடிகுண்டு இருக்கிறது' என கிண்டலாக பதில் அளித்து உள்ளார். இது மற்ற பயணியரிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது.
விமான ஊழியர்கள், உடனடியாக மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களை அழைத்தனர். அவரை, தனி அறைக்கு அழைத்து சென்று உடைமைகளை சோதனையிட்டனர். முதியவர் கூறியது பொய் என்பது தெரிந்தது.
ஆனாலும், அவரை விமானத்தில் ஏற, விமான நிறுவனம் அனுமதிக்கவில்லை.
அவரை விமான நிலைய போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, எச்சரித்து அனுப்பினர்.
இதுபோன்று கடந்த மாதம் 'ஏர் இந்தியா' எக்ஸ்பிரஸ் விமானத்தில் புனேவுக்கு சென்ற பயணி, பாதுகாப்பு சோதனையின் போது, தனது லக்கேஜில் வெடிகுண்டு இருப்பதாக கூறியதால், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

