மைசூரு 10 வழி சாலையில் 2 நாளில் 8,156 விதிமீறல்கள்
மைசூரு 10 வழி சாலையில் 2 நாளில் 8,156 விதிமீறல்கள்
ADDED : ஜூன் 10, 2024 04:55 AM
பெங்களூரு,: பெங்களூரு - மைசூரு பத்து வழி சாலையில், இரண்டு நாட்களில் 8,156 வாகன ஓட்டிகள், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு உள்ளனர்.
பெங்களூரு - மைசூரு நகரங்களை விரைவில் சென்றடையும் வகையில், பத்து வழி சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையில் வாகன ஓட்டிகள், வேக கட்டுப்பாடு இன்றி வாகனங்களை ஒட்டி சென்றதால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்தன.
இதனை தடுக்க சாலை பாதுகாப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி., அலோக்குமார் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
பத்து வழி சாலையில் வாகனங்கள் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
அதனை மீறி செல்லும் வாகனங்களை, சாலையில் பொருத்தப்பட்டு உள்ள, அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் புகைப்படம் எடுக்கும். அதன்மூலம் வாகன ஓட்டிகளிடம் இருந்து, அபராதம் வசூலிக்கப்படுகிறது. வேக கட்டுப்பாட்டிற்கு பின்னர், பத்து வழி சாலையில் விபத்துகள் வெகுவாக குறைந்து உள்ளது.
இந்நிலையில் கடந்த 1, 2 ம் தேதிகளில், பத்து வழி சாலையில் 8,156 போக்குவரத்து விதிமீறல் நடந்து உள்ளன. இதுபற்றி அலோக்குமார் தனது, 'எக்ஸ்' பக்கத்தில் கூறி உள்ளார்.
இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணித்தது, ஹெல்மெட் அணியாமல் சென்றது, மொபைல் போனில் பேசியபடி வாகனம் ஓட்டியது, சீட் பெல்ட் அணியாமல் வாகனங்கள் ஓட்டியது, அதிவேகமாக ஓட்டியது.
தவறான பாதையில் சென்றது, ஒரு வழி பாதையில் வாகனங்களை ஓட்டியது உட்பட, பல வழிகளில் 8,156 வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறி உள்ளனர்.
விதி மீறிய வாகன ஓட்டிகளிடம் இருந்து 43,15,000 ரூபாய் அபராதம் வசூலிக்க வேண்டும். இப்போது வரை 179 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு 91,500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

