873 மரம் வெட்டியவருக்கு ரூ.50,000 அபராதம்: தணிக்கை அறிக்கையில் முறைகேடு அம்பலம்
873 மரம் வெட்டியவருக்கு ரூ.50,000 அபராதம்: தணிக்கை அறிக்கையில் முறைகேடு அம்பலம்
UPDATED : ஜூலை 26, 2024 05:06 PM
ADDED : ஜூலை 26, 2024 05:02 PM

பெங்களூரு: வனப்பகுதியில் குத்தகைதாரர் ஒருவர், சட்ட விரோதமாக 873 மரங்களை வெட்டியும், வெறும் 50,000 ரூபாய் அபராதம் விதித்தது. உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், 22,173 ஏக்கர் ஆக்கிரமிப்பை அகற்றாமல், வனத்துறை அலட்சியம் காண்பித்தது சி.ஏ.ஜி., அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முதல்வர் சித்தராமையா சார்பில், சட்ட அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல், நேற்று மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்திருந்தார். இதில் வனத்துறை, ஹிந்து அறநிலையத் துறை, பெங்களூரு நகர வளர்ச்சி, பொதுப்பணி உட்பட பல்வேறு துறைகளின் விதிமீறல், முறைகேடு, அலட்சியம் விவரிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஒப்பந்ததாரர் ஒருவர், சட்டவிரோதமாக 873 மரங்களை வெட்டியும், வெறும் 50,000 ரூபாய் மட்டும் அபராதம் விதித்து, வழக்கு முடிக்கப்பட்டுள்ளது. ஜே.சி.பி., டிராக்டர் பயன்படுத்தி மரங்களை வெட்டி, நிலத்தை சமன்படுத்தி வனப்பகுதியை ஆக்கிரமித்தது போன்ற கடுமையான குற்றங்களுக்கு வெறும் 2,000 ரூபாய் மட்டுமே அபராதம் விதித்துள்ளனர்.
அபராதம் விதிப்பு
இத்தகைய ஐந்து வழக்குகளில், 2,000 முதல் 26,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். வனப்பகுதியை அழிக்க பயன்படுத்திய டிராக்டர், ஜே.சி.பி.,க்களையும் வனத்துறை பறிமுதல் செய்யவில்லை. வனப்பகுதிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தவர்கள், நிலத்தை முறைப்படுத்த கோரி, தாக்கல் செய்த மனுக்களை நீதிமன்றம் நிராகரித்தும் கூட, ஆக்கிரமிப்பை அகற்ற வனத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னும், 22,173 ஏக்கர் ஆக்கிரமிப்பை இதுவரை அகற்றவில்லை.
மெத்தனம்
அந்தந்த லே - அவுட்களில், மேம்பாட்டு வரி விதிக்க மாநில அரசு ஒப்புதல் அளித்து, மூன்றாண்டுகள் கடந்தும், அர்க்காவதி மற்றும் கெம்பேகவுடா லே - அவுட்களில் வரி வசூலிப்பதில், பெங்களூரு நகர வளர்ச்சி ஆணையம் ஆர்வம் காண்பிக்கவில்லை. இதனால், 3,503 கோடி ரூபாய் வரி வசூலிக்க வாய்ப்பிருந்தும், வெறும் 3.22 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்தது.இதேபோன்று, ஹிந்து அறநிலையத் துறை, பொதுப்பணி, பெங்களூரு நகர வளர்ச்சி உட்பட பல்வேறு துறைகளில் குளறுபடிகள் நடந்துள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.