ADDED : செப் 12, 2024 09:46 PM
விக்ரம்நகர்:இரவு 9:00 மணி முதல் அதிகாலை 2:00 மணி வரை அதிக அளவில் சாலை விபத்து நேர்கின்றன. இவற்றில் உயிரிழப்பவர்களில் 89 சதவீதம் ஆண்கள் என்பது தெரிய வந்துள்ளது.
கடந்த 2022ம் ஆண்டில் நிகழ்ந்த சாலை விபத்துகள் குறித்த அறிக்கையை மாநில அரசு அண்மையில் வெளியிட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2022ம் ஆண்டில் 1,517 சாலை விபத்துகள் நேர்ந்துள்ளன. இவற்றில் 1,571 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது சராசரியாக தினமும் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 28 சதவீதம் அதிகம்.
இந்த விபத்துக்களால் உயிரிழந்தவர்களில் 50 சதவீதம் பேர் பாதசாரிகள், 45 சதவீதம் பேர் இருசக்கர வாகன ஓட்டிகள், பயணியர்.
உயிரிழந்தவர்களில் 89 சதவீதம் ஆண்கள், 11 சதவீதம் பேர் பெண்கள். குறிப்பாக 30 முதல் 39 வயதுக்குட்பட்ட ஆண்களே அதிக அளவில் உயிரிழந்துள்ளனர்.
சாலை விபத்துகளை பகுப்பாய்வு செய்ததில் இரவு 9:00 மணி முதல் அதிகாலை 2:00 மணி வரை நேர்ந்த விபத்துகளிலேயே அதிக அளவில் மரணம் நிகழ்ந்தது தெரிய வந்துள்ளது.
அதிவேகமாக வாகனங்களை ஓட்டியதாலேயே இந்த விபத்துகள் நேர்ந்ததாக கூறப்படுகிறது.
தவிர சனி, ஞாயிறு, திங்கட்கிழமைகளில் அதிக எண்ணிக்கையிலான விபத்துகளும் இறப்புகளும் பதிவாகியுள்ளன.
கனரக மற்றும் இலகுரக மோட்டார் வாகனங்கள் உயிரிழப்பு ஏற்படுத்திய 81 சதவீத விபத்துகளுக்குப் பொறுப்பு என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. விபத்துக்குப் பின் 59 சதவீத வாகன ஓட்டிகள் தப்பிச் செல்வதும் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிட் அண்ட் ரன் விபத்துகளை தவிர்க்க பாதசாரிகள் நடக்கும் பகுதியை அதிகப்படுத்துதல், சாலையை பாதசாரிகள் நடக்கும் துாரத்தை குறைத்தல், சாலைத்தடுப்புகளின் உயரத்தை அதிகரித்தல், வேகத்தை பராமரித்தல், ஹெல்மெட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்குதல், சீட் பெல்ட் கட்டாயமாக்குதல் உள்ளிட்ட பரிந்துரைகள் செய்யப்படுகின்றன.