தினமும் 90 பலாத்கார வழக்குகள்: மோடிக்கு கடிதம் எழுதி மம்தா வேதனை
தினமும் 90 பலாத்கார வழக்குகள்: மோடிக்கு கடிதம் எழுதி மம்தா வேதனை
ADDED : ஆக 22, 2024 07:16 PM

புதுடில்லி: தரவுகள் அடிப்படையில் நாடு முழுதும் தினமும் 90 பலாத்கார வழக்குகள் பதியப்படுவது வேதனை அளிக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது நமது கடமையாகும் என பிரதமர் மோடிக்கு, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதி வலிறுத்தியுள்ளார்.
மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில், ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்த, 31 வயது பயிற்சி பெண் டாக்டர், பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் நாட்டையே அதிர வைத்தது.
சஞ்சய் ராய் என்பவரை கைது செய்துள்ளனர். வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. பெண் டாக்டர் கொலைக்கு நீதி கேட்டு, நாடு முழுதும் பயிற்சி டாக்டர்கள், மருத்துவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்
இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி , பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை முதல்வரின் தலைமை ஆலோசகர் அலபன் பந்தோபாத்யாயா செய்தியாளர்களுக்கு வாசித்தார்.
அதில் நாடு முழுவதும் பாலியல் பலாத்கார வழக்குகள் அதிகரித்து வருவதை இந்நேரத்தில் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
இந்த வழக்குகளில் சிலவற்றில் கொலை சம்பவங்களும் நடகிறது. இதன் மூலம் தரவுகள் அடிப்படையில் நாடு முழுதும் தினமும் 90 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
இது போன்ற தரவுகள் நம் சமூகம் மற்றும் தேசத்தின் நம்பிக்கையையும் மனசாட்சியையும் உலுக்குகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது நம் கடமை.
இத்தகைய கொடூரமான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடுமையான மத்திய சட்டத்தின் கீழ் விரைவாக விசாரணை நடத்தி, விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, வழக்கினை 15 நாட்களுக்கு முடிக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.