ரேணுகாசாமி கொலை வழக்கில் 3,991 பக்கங்களில்... குற்றப்பத்திரிகை தாக்கல்! தர்ஷன் உட்பட 17 பேர் மீதும் பரபரப்பு குற்றச்சாட்டு
ரேணுகாசாமி கொலை வழக்கில் 3,991 பக்கங்களில்... குற்றப்பத்திரிகை தாக்கல்! தர்ஷன் உட்பட 17 பேர் மீதும் பரபரப்பு குற்றச்சாட்டு
ADDED : செப் 05, 2024 05:27 AM

பெங்களூரு: ரேணுகாசாமி கொலை வழக்கில் 3,991 பக்க குற்றப்பத்திரிகையை, நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்துள்ளனர். இதில், நடிகர் தர்ஷன் உட்பட 17 பேர் மீதும் பரபரப்பு குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது.
சித்ரதுர்காவை சேர்ந்தவர் ரேணுகாசாமி, 33. மருந்தகத்தில் வேலை செய்தார். நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகர். தர்ஷனுக்கும், அவரது மனைவி விஜயலட்சுமிக்கும் இடையில், தர்ஷனின் நெருங்கிய தோழி பவித்ரா கவுடா இருப்பது பற்றிய செய்திகள், ஊடகங்களில் வெளியாகின.
இதனால் வெறுப்பான ரேணுகாசாமி, தனது இன்ஸ்டாகிராமில் இருந்து, பவித்ராவுக்கு ஆபாச புகைப்படங்கள், மெசேஜ் அனுப்பினார். இதுபற்றி பவித்ராவின் கார் டிரைவர் பவன் மூலம், தர்ஷனுக்கு தெரிந்தது.
தர்ஷன் உத்தரவுப்படி, சித்ரதுர்காவில் இருந்து கடந்த ஜூன் 8ம் தேதி, ரேணுகாசாமி பெங்களூருக்கு காரில் கடத்தி வரப்பட்டார். ஆர்.ஆர்.நகர் பட்டனகெரே ஷெட்டில் வைத்து, அவர் மீது தர்ஷன், பவித்ரா, பவன் உள்ளிட்டோர் கொடூரமாக தாக்குதல் நடத்தினர். பலத்த காயம் அடைந்தவர் அங்கேயே இறந்தார். உடலை காரில் எடுத்து சென்று, காமாட்சிபாளையா பகுதியில், ஓடும் சாக்கடை கால்வாய் அருகே வீசினர்.
* அழுத்தம்
ஜூன் 9ம் தேதி ரேணுகாசாமி உடலை, போலீசார் மீட்டனர். அவரை கொன்றதாக கூறி, கார்த்திக், கேசவமூர்த்தி, நிகில் நாயக் ஆகிய, மூன்று பேர் சரண் அடைந்தனர். கொலைக்கான சரியான காரணத்தை கூறாததால், சந்தேகம் அடைந்த போலீசார், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
இதில், ரேணுகாசாமியை கொன்றது தர்ஷன், பவித்ரா உள்ளிட்டோர் என்பது தெரிந்தது. மைசூரில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றிருந்த தர்ஷனை, ஜூன் 10ம் தேதி போலீசார் கைது செய்தனர். பின், பவித்ரா உட்பட 16 பேர் கைதாகினர். இந்த கொலை சம்பவம், கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தர்ஷனுக்கு அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதால், அவரை வெளியே கொண்டு வர, அரசியல்வாதிகள் சிலர் முயற்சி செய்தனர். இரண்டு அமைச்சர்களும் கூட, முதல்வர் சித்தராமையாவுக்கு அழுத்தம் கொடுக்க பார்த்தனர். ஆனால் எக்காரணம் கொண்டும் கொலையாளிகள் தப்ப கூடாது என்பதில், முதல்வர் உறுதியாக இருந்தார்.
கொலை குறித்து தீவிர விசாரணை நடத்த, பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தாவுக்கு உத்தரவு பிறப்பித்தார். விஜயநகர் உதவி போலீஸ் கமிஷனர் சந்தன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
* வாக்குமூலம்
ரேணுகாசாமியை கொலை செய்த பட்டனகெரே ஷெட், அவரது உடல் வீசப்பட்ட இடம், தர்ஷனின் வீடு, பவித்ராவின் வீடு, மற்ற கொலையாளிகளின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தி, ஆதாரங்களை சேகரித்தனர். தொழில்நுட்ப ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டன. கொலை செய்த போது தர்ஷன், பவித்ரா அணிந்திருந்த உடைகள், காலணிகள் உள்ளிட்ட ஆதாரங்கள், பெங்களூரு, ஹைதராபாதில் உள்ள தடய அறிவியல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
நீதிபதி முன்பு நடிகர் சிக்கண்ணா உள்ளிட்டோர் பிரிவு 164ன் கீழ், ரகசிய வாக்குமூலம் அளித்தனர். கொலைக்கான சாட்சிகள், பறிமுதல் செய்யப்பட்ட ஆதாரங்களை வைத்து, போலீசார் குற்றப்பத்திரிகை தயாரிக்க ஆரம்பித்தனர். தடய அறிவியல் மையத்தில் இருந்து கிடைத்த அறிக்கைகளும், குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டன.
ரேணுகாசாமி கொலை செய்யப்பட்டு வரும் 8ம் தேதியுடன், மூன்று மாதங்கள் ஆகிறது. வழக்கில் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால், கடந்த சில தினங்களாக குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியில், விசாரணை அதிகாரி சந்தன் தலைமையிலான போலீசார், மும்முரமாக ஈடுபட்டனர்.
* டாக்டர்
நேற்று முன்தினம் இரவு, குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணிகள் முடிந்தன. காமாட்சிபாளையா போலீஸ் நிலையத்தில் இருந்து, விசாரணை அதிகாரி சந்தனின் அலுவலகம் உள்ள பசவேஸ்வராநகர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. நேற்று காலை 11:30 மணிக்கு பெங்களூரு 24வது ஏ.சி.எம்.எம்., நீதிமன்றத்தில், நீதிபதி மாருதேஷ் பரசுராம் முன்பு, ரேணுகாசாமி கொலை தொடர்பாக, தர்ஷன் உட்பட 17 பேர் மீது 3,991 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு உள்ள முக்கிய அம்சங்கள்:
1. ரேணுகாசாமியின் கொலைக்கு முக்கிய காரணம் பவித்ரா கவுடா. ரேணுகாசாமியை அவர் செருப்பால் அடித்து உள்ளார். கொலை நடந்த இடத்தில் அவர் இருந்ததற்கு ஆதாரம் உள்ளது
2. ரேணுகாசாமியை சித்ரதுர்காவில் இருந்து கடத்தி வர கூறியது; பட்டனகெரே ஷெட்டில் வைத்து அவரை தாக்கியதில் தர்ஷன் பங்கு உள்ளது. சாட்சிகளை அழிக்கவும் முயற்சி செய்து உள்ளார்
3. சட்டபிரிவு 164ன் கீழ் நீதிபதி முன்பு 27 பேர் ரகசிய வாக்குமூலம் அளித்து உள்ளனர். மூன்று பேர் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள்
4. சட்டபிரிவு 161ன் கீழ் போலீசார் முன்பு 70 பேர் வாக்குமூலம் அளித்து இருக்கின்றனர்
5. ரேணுகாசாமி உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர் அறிக்கை பெறப்பட்டு உள்ளது
6. ரேணுகாசாமியை கடத்தி வர பயன்படுத்தப்பட்ட கார், அவரது உடலை எடுத்து செல்ல பயன்படுத்தப்பட்ட காரின், வாகன பதிவெண்ணை வைத்து, உரிமையாளர்கள் யார் என்று, வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் தகவல் பெறப்பட்டு உள்ளது
7. 56 போலீசார் வழக்கில் சாட்சிகளாக உள்ளனர்.
8. எப்.எஸ்.எல்., எனப்படும் தடயவியல் ஆய்வகத்தில் இருந்து எட்டு அறிக்கைகள் பெறப்பட்டு உள்ளன. ஹைதராபாதில் இருந்து இன்னும் சில அறிக்கைள் வர வேண்டி உள்ளது
9. ரேணுகாசாமியை கொன்ற போது தர்ஷன் உட்பட சிலர் அணிந்திருந்த ஆடைகளில் படிந்த ரத்தக்கறை, ரேணுகசாமியின் ரத்தம் என்று உறுதி செய்யப்பட்டு உள்ளது
10. ரேணுகாசாமி மீது தாக்குதல் நடந்த போது வீடியோ, புகைப்படம் எடுத்து உள்ளனர். அவைகள் அழிக்கப்பட்டன. ஆனால் அழிக்கப்பட்ட வீடியோ, புகைப்படம் மீட்டெடுக்கப்பட்டது
11. பவித்ராவுக்கு, ரேணுகாசாமி ஆபாச புகைப்படம், மெசேஜ் அனுப்பியதை, இன்ஸ்டாகிராம் நிறுவனம் உறுதி செய்து உள்ளது
12. பிரேத பரிசோதனை அறிக்கையில் இறந்தவர் உடலில் 39 இடங்களில் காயம் ஏற்பட்டு உள்ளது; உடலில் மின்சாரம் பாய்ச்சப்பட்டு உள்ளது என்று கூறப்பட்டு உள்ளது
மேற்கண்டவை உட்பட மேலும் சில தகவல்கள், குற்றப்பத்திரிகையில் இடம்பெற்று உள்ளன. நேரில் கண்ட சாட்சி, ரகசிய வாக்குமூலம் உட்பட 231 சாட்சிகள் சமர்பிக்கப்பட்டு உள்ளன.
* ஜாமின்
குற்றப்பத்திரிகையை போலீசார் 20 நகல்கள் எடுத்து உள்ளனர். ஒன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. ஒன்று போலீசாரிடம், ஒன்று அரசு வக்கீல் பிரசன்னகுமாரிடமும் இருக்கும்.
மேலும் 17 நகல்கள், தர்ஷன் உட்பட 17 பேரின் வக்கீல்களுக்கும் வழங்கப்பட உள்ளது. வரும் 9ம் தேதி வரை, குற்றப்பத்திரிகையில் என்னென்ன தகவல் உள்ளது என்று, நீதிபதி மாருதேஷ் பரசுராம் ஆய்வு செய்ய உள்ளார். வரும் 10ம் தேதி வக்கீல்களிடம் நகல்கள் ஒப்படைக்கப்பட உள்ளன.
பின், வழக்கு விசாரணை செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட உள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதால், ஜாமின் கேட்டு தர்ஷன் உள்ளிட்டோர் நீதிமன்றத்தை அணுகவும் வாய்ப்பு உள்ளது.
========
பாக்ஸ்
வரிசையில் மாற்றம் இல்லை
கொலை வழக்கில் பவித்ரா ஏ 1, தர்ஷன் ஏ 2, பவன் ஏ 3, ராகவேந்திரா ஏ 4, நந்தீஷ் ஏ 5, ஜெகதீஷ் ஏ 6, அனுகுமார் ஏ 7, ரவி ஏ 8, தன்ராஜ் ஏ 9, வினய் ஏ 10, நாகராஜ் ஏ 11, லட்சுமண் ஏ 12, தீபக் ஏ 13, பிரதோஷ் ஏ 14, கார்த்திக் ஏ 15, கேசவமூர்த்தி ஏ 16, நிகில் நாயக் ஏ 17 என எப்.ஐ.ஆர்.ரில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
கொலைக்கு தர்ஷன் பங்கு முக்கியமாக இருந்தது விசாரணையில் தெரிந்ததால், குற்றப்பத்திரிகையில் தர்ஷன் பெயர் ஏ 1 ஆக குறிப்பிடப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால் நேற்று தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், எப்.ஐ.ஆரில் என்ன வரிசை உள்ளதோ, அதை வரிசையே இடம்பெற்று உள்ளது.
=====
பவித்ராவுக்கு 'டென்ஷன்'
பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் பவித்ரா, சிறை ஊழியர்களிடம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதா, அதில் என்ன கூறி உள்ளனர் என்று கேட்டு உள்ளார். 3,991 பக்க குற்றப்பத்திரிகை என்று கூறியதும், அவர் அதிர்ச்சியில் உறைந்து உள்ளார்.
அவர் ஏற்கனவே ஜாமின் கேட்டு, நீதிமன்றத்தில் விண்ணப்பித்தார். ஆனால் அது தள்ளுபடி செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகையில் கொலையில் தனது பங்கு முக்கியம் என்று, போலீசார் கூறி இருப்பது பவித்ராவுக்கு டென்ஷனை ஏற்படுத்தி உள்ளது. நேற்று மதியத்தில் இருந்து அவர் அமைதியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
========
வக்கீலுடன் ஆலோசனை
பல்லாரி சிறையில் இருக்கும் தர்ஷன், குற்றப்பத்திரிகை தாக்கல் ஆனது பற்றி, சிறை ஊழியர்களிடம் கேட்டு உள்ளார். 231 சாட்சிகள் என்பதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து உள்ளார். சிறை கண்காணிப்பாளர் ஷோபாவிடம், 'எனது வக்கீலிடம் பேச வேண்டும். ஐந்து நிமிடம் அனுமதி கொடுங்கள்' என்று கேட்டு இருக்கிறார். இதற்கு ஒப்புதல் கிடைத்து உள்ளது.
ஆனால், வக்கீலின் நம்பர் மறந்து போனதால், மனைவி விஜயலட்சுமிக்கு முதலில் போன் செய்து, வக்கீல் நம்பரை வாங்கி, பின், வக்கீலுடன் பேசி, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதித்தார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
***