ADDED : ஜூன் 20, 2024 09:57 PM
மகேந்திரா:கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டான்.
வடமேற்கு டில்லியின் மகேந்திரா பார்க் பகுதியில் என்.டி.பி.எல்., அலுவலகம் அருகே சிறுவன் கத்திக்குத்துக் காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு நேற்று முன் தினம் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சிறுவனை மீட்டு பாபு ஜக்ஜீவன் ராம் நினைவு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சிறுவன் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளது. இந்த வழக்கில் கைதாகி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து கடந்த மாதம் தான் விடுவிக்கப்பட்டான்.
அந்த வழக்கில் பழிக்குப்பழியாக சிறுவன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.