3ம் வகுப்பு மாணவனை சுட்டு 5 வயது சிறுவன் வெறிச்செயல்
3ம் வகுப்பு மாணவனை சுட்டு 5 வயது சிறுவன் வெறிச்செயல்
UPDATED : ஆக 01, 2024 04:41 AM
ADDED : ஆக 01, 2024 01:24 AM

சுபொல், பீஹாரில், 5 வயது மாணவன் பள்ளிக்கு துப்பாக்கி எடுத்து வந்து, மூன்றாம் வகுப்பு மாணவனை சுட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பீஹாரின் சுபொல் மாவட்டத்தில், லால்பதி பகுதியில் செயின்ட் ஜோன் உறைவிட பள்ளி உள்ளது.
இங்கு நர்சரி வகுப்பில் படிக்கும் 5 வயது சிறுவன், தன் பெற்றோருக்கு தெரியாமல், புத்தகப் பையில் துப்பாக்கியை மறைத்து வைத்து பள்ளிக்கு எடுத்து வந்துள்ளான்.
அதே பள்ளியில் படிக்கும், 10 வயதான மூன்றாம் வகுப்பு மாணவனை துப்பாக்கியால் சுட்டான். இதில், அந்த மாணவன் படுகாயம் அடைந்தான். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து காயம் அடைந்த மாணவன் கூறுகையில், 'நான் எப்போதும் போல வகுப்பறைக்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது என் முன் வந்து நின்ற அந்த சிறுவன், தன் பையில் இருந்து துப்பாக்கியை எடுத்தான். பொம்மை துப்பாக்கி என நினைத்தேன். அதற்குள் என் கையில் சுட்டு தப்பி விட்டான். எனக்கும் அந்த சிறுவனுக்கு எந்த சண்டையும் இல்லை,' என்றான்.
பள்ளியில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர் கேள்வி எழுப்பி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பள்ளி நிர்வாகத்தையும், சிறுவனின் பெற்றோரையும் விசாரித்து வரும் போலீசார், பள்ளியில் மாணவர்களின் பைகளை தினமும் சோதனையிடும்படி அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிட்டுள்ளனர்.