ஒரு மாதத்திற்கு மேலாக உயிருக்கு போராடும் பெண் சிசு
ஒரு மாதத்திற்கு மேலாக உயிருக்கு போராடும் பெண் சிசு
ADDED : ஜூலை 06, 2024 02:30 AM

கிழக்கு டில்லியின் விவேக் விஹாரில் பேபி கேர் நியூ பார்ன் சைல்டு என்ற தனியார் மருத்துவமனையில் மே 25ம் தேதி இரவு 11:30 மணியளவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏழு பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தன.
ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து, இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. விபத்தில் இந்த குழந்தைகள் தவிர மேலும் ஐந்து குழந்தைகள் பலத்த காயமடைந்தன. இந்த குழந்தைகள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டன.
அங்கு அந்த குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தன. இதில் நான்கு குழந்தைகள் உடல் நலன் தேறி பெற்றோருடன் வீடு திரும்பின.
ஒரே ஒரு பெண் குழந்தைக்கு இன்னும் சிகிச்சை தொடர்ந்து வருகிறது. அந்த குழந்தை மூச்சுத் திணறல் மற்றும் தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறது. குழந்தையின் பெற்றோரான ராகேஷ் - கரிஷ்மா தம்பதி, விபத்து நேர்ந்த பயங்கரமான இரவை நினைவுகூர்ந்தனர். விபத்து குறித்து ராகேஷ் கூறியதாவது:
எங்கள் குழந்தை உயிருடன் இருக்கிறதா என்பதை அறிய நாங்கள் மருத்துவமனைக்கு வெளியே நின்றுகொண்டிருந்தோம். என்ன நடக்கிறது என்பதே தெரியாது. அன்று ஏற்பட்ட பாதிப்பால், என் மகளுக்கு இன்னும் மூச்சுத் திணறல் உள்ளது. இருப்பினும், அவளது தீக்காயங்கள் குணமாகி வருகின்றன. சாச்சா நெஹ்ரா பால் சிக்கித்சாலயாவில் அவளுக்கு சிகிச்சை தொடர்கிறது.
என் மனைவியுடன் சேர்ந்து எங்கள் முழு நேரத்தையும் மருத்துவமனையில் செலவிடுகிறோம். நாங்கள் இருவரும் எங்கள் வேலையில் இருந்து விடுப்பு எடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.