ADDED : ஏப் 20, 2024 05:10 AM

சிக்கபல்லாபூர், லோக்சபா தேர்தலில் ஓட்டு சதவீதத்தை அதிகரிக்க வரும், 25, 26ம் தேதிகளில் நந்தி மலைக்கு செல்ல, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கர்நாடகாவில் முதல் கட்டமாக சிக்கபல்லாபூர் உட்பட 14 லோக்சபா தொகுதிகளுக்கு வரும் 26ம் தேதி ஓட்டு பதிவு நடக்கிறது. ஓட்டு பதிவு நாளன்று, ஓட்டு போட வசதியாக, ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தனியார் நிறுவனங்களுக்கு தேர்தல் ஆணையம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஓட்டு பதிவு ஏப்., 26ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. 27, 28ம் தேதி வார இறுதி நாட்கள் என்பதால் பெரும்பாலானோர், 25ம் தேதியே சுற்றுலா புறப்படும் வாய்ப்பு உள்ளது.
இதை தடுக்கும் வகையிலும், ஓட்டு சதவீதத்தை அதிகரிக்கவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
ஓட்டு சதவீதத்தை அதிகரிக்கும் வகையில், வரும் 25 ம் தேதி மாலை 6:00 மணி முதல் 26ம் தேதி இரவு 8:00 மணி வரை, நந்தி மலைக்கு செல்ல யாருக்கும் அனுமதியில்லை.
இந்த நாட்களில் ஹோம் ஸ்டேக்கள், சொகுசு விடுதிகள் முன்பதிவு செய்யக்கூடாது என்று உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

