ராபர்ட் வாத்ராவுக்கு சீட்டு கேட்டு அமேதியில் முளைத்துள்ள பேனர்
ராபர்ட் வாத்ராவுக்கு சீட்டு கேட்டு அமேதியில் முளைத்துள்ள பேனர்
ADDED : ஏப் 25, 2024 02:17 AM
அமேதி:உத்தர பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான அமேதிக்கு காங்கிரஸ் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ராவுக்கு வாய்ப்பு கேட்டு அமேதியில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
உத்தர பிரதேசத்தில் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. காங்கிரசின் நட்சத்திர தொகுதிகளான அமேதி மற்றும் ரேபரேலிக்கு, ஐந்தாம் கட்டமாக மே 20ல் தேர்தல் நடக்கிறது. அதற்கான வேட்புமனு தாக்கல் நாளை துவங்குகிறது.
அமேதி தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளர் இன்னும் அறிவிக்கவில்லை. அக்கட்சி அமைதி காத்து வருகிறது.
அமேதி தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்ற ராகுல், கடந்த தேர்தலில் பா.ஜ.,வின் ஸ்மிருதி இரானியிடம் தோற்றார். அவர் இந்த முறை கேரளாவின் வயநாடு தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறார். அங்கு நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது.
அதேபோல் ரேபரேலி தொகுதி எம்.பி.,யாக தொடர்ந்து நான்கு முறை பதவி வகித்த சோனியா, இந்த முறை ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வாகி இருக்கிறார்.
இதனால் இந்த இரு நட்சத்திர தொகுதிகளில் போட்டியிடப் போகும் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமேதி பா.ஜ., வேட்பாளர் ஸ்மிருதி இரானி, வேட்பாளரை அறிவிக்காத காங்கிரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில் வேட்பாளரை அறிவிக்காமல் காங்கிரஸ் இறுமாப்புடன் இருப்பதாக கூறினார்.
இதற்கிடையே, அமேதி தொகுதியில் போட்டியிட பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ரா சமீபத்தில் தன் விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார். தான் போட்டியிட்டால் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் எனவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் அமேதியின் காங்கிரஸ் அலுவலகத்தைச் சுற்றி ராபர்ட் வாத்ரா படத்துடன் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில், 'அமேதி மக்கள் இந்த முறை ராபர்ட் வாத்ராவை எம்.பி.,யாக்க விரும்புகின்றனர்' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

