ADDED : மே 05, 2024 05:46 AM
மாலுார்: மாலுாரின் டேக்கல் அருகே உள்ள மிட்டகான ஹள்ளி -- பண்டூர் அக்ரஹாரா இடையே உள்ள தைல மரத்தோப்பில் காட்டுப் பன்றிக்கு விரித்திருந்த வலையில் கரடி ஒன்று சிக்கியது.
வனப் பகுதியில் இருந்து டேக்கல், மிட்டகான ஹள்ளி, அதனைச் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் அவ்வப்போது சிறுத்தைகள், காட்டுப் பன்றிகள், கரடிகள், மான்கள் என, வன விலங்குகள் நடமாடுவது வழக்கம்.
இதனால் சுற்றுப்புற பகுதிகளில் விளைப்பொருட்கள் நாசமாவதும், கால்நடைகள் பலியாவதும் வழக்கமாக இருந்து வருகிறது.
காட்டுப் பன்றிகளை பிடிக்க சில மர்ம நபர்கள் தைல மரத் தோப்பில் வலை விரித்திருந்தனர். நேற்று முன்தினம் இரவு கரடி ஒன்று, இந்த வலையில் சிக்கியது. வெளியே வர முயன்றும், அதன் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் கரடி பயங்கரமாக சத்தமிட்டது.
இதைக் கேட்ட கிராம மக்கள், சம்பவ இடத்திற்கு திரண்டு வந்தனர். வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வன அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். வலைக்குள் சிக்கியிருந்த கரடிக்கு மயக்க மருந்து செலுத்தினர். பத்திரமாக வேனில் ஏற்றி பன்னர்கட்டா வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.