பிளாஸ்டிக் பாட்டில்களால் உருவான பெஞ்ச் 400 ஆண்டுகள் அழியாமல் இருக்கும்
பிளாஸ்டிக் பாட்டில்களால் உருவான பெஞ்ச் 400 ஆண்டுகள் அழியாமல் இருக்கும்
ADDED : ஜூலை 27, 2024 11:02 PM

தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி, தனியார் அமைப்பு இருக்கைகள் தயாரித்துள்ளது. இவற்றின் ஆயுள் காலம் 400 ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு மாநகராட்சி உட்பட உள்ளாட்சிகளுக்கு, பிளாஸ்டிக் கழிவுகளை அழிப்பதே, பெரும் தலைவலியாக உள்ளது. இது மண்ணில் எளிதில் மட்காது என்பதால், சுற்றுச்சூழலுக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பயன் இல்லை.
உதவும் பொருள்
'சிறு துரும்பும் பல் குத்த உதவும்' என்ற பழமொழிக்கு ஏற்றபடி, தேவையின்றி ரோட்டில் வீசப்படும் பிளாஸ்டிக்கை, நல்ல முறையில் பயன்படுத்தலாம் என்பதை, தனியார் அமைப்பு ஒன்று சாதித்து காண்பித்துள்ளது.
தட்சிணகன்னடா, மங்களூரின், சி.ஒ.டி.பி., என்ற, 'கெனரா ஆர்கனைசேஷன் ஆப் டெவலப்மென்ட் அண்ட் பீஸ்' என்ற அமைப்பு, சுற்றுச்சூழலுக்கு ஏற்றபடி, பிளாஸ்டிக் பயன்படுத்தி நீளமான இருக்கைகள் தயாரித்துள்ளது. இதனால் பிளாஸ்டிக் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல், பொது மக்களுக்கு உதவும் பொருளாக மாறுகிறது.
மங்களூரின் பாதர் முல்லர் மருத்துவமனை வளாகம், பஜீர் தேவாலயம் வளாகத்தில் இந்த கண் கவர் இருக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை மக்கள் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, மற்ற இடங்களிலும் இத்தகைய இருக்கைகள் வைக்க திட்டமிட்டுள்ளது.
உடலுக்கு ஆபத்து
சி.ஒ.டி.பி., இயக்குனர் பாதர் வின்சென்ட் டிசோசா கூறியதாவது:
பிளாஸ்டிக் பயன்படுத்தி, நாங்கள் தயாரித்துள்ள பென்ஞ்சுகள், 400 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டவை. வீடு, வீடாக சென்று பிளாஸ்டிக் பொருட்கள், கவர்கள், குடிநீர் பாட்டில்களை சேகரிக்கிறோம்.
இதற்கு முன், அவற்றை மொத்தமாக சேர்த்து எரித்து வந்தோம். இப்படி செய்வதால், உருவாகும் கார்பன் டை ஆக்சைடு நம் உடலுக்கு ஆபத்தானது என்பது தெரிந்தது.
அப்போதுதான் ஜெர்மனியில் இருந்து வந்த, இரண்டு மாணவர்கள் பிளாஸ்டிக்குகளை பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில், தயாரிப்பது குறித்து எங்களுக்கு கற்று கொடுத்தனர்.
அதன்படி நாங்கள் பயிற்சி பெற்றோம். இருக்கைகளை தயாரிக்க துவங்கினோம்.
பாதர் முல்லர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிளாஸ்டிக் பெஞ்ச், நடப்பாண்டு மே மாதம் பொருத்தப்பட்டது. சிறப்பு பயிற்சி பெற்ற இரண்டு தொழிலாளர்கள், இந்த பெஞ்சை உருவாக்கினர்.
இது வேலை வாய்ப்பையும் அதிகரிக்கிறது. பொது மக்களின் தேவை அடிப்படையில், பெஞ்ச் தயாரித்து கொடுக்கிறோம். மரங்கள், செடிகளை தொடாமல் பெஞ்சுகளை தள்ளி வைக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -