தேர்தலில் சீட் கிடைக்காததால் கதறி அழுத பா.ஜ., பிரமுகர்
தேர்தலில் சீட் கிடைக்காததால் கதறி அழுத பா.ஜ., பிரமுகர்
UPDATED : செப் 07, 2024 02:03 AM
ADDED : செப் 07, 2024 02:01 AM

சண்டிகர் :ஹரியானாவில், முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு, அடுத்த மாதம் 5ல் தேர்தல் நடக்கிறது.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 12; அக்டோபர் 8ல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இங்கு, மொத்தம் 90 தொகுதிகள் உள்ள நிலையில், முதற்கட்டமாக 67 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை பா.ஜ., சமீபத்தில் அறிவித்தது.
இதில் தற்போதைய அமைச்சரவையில் உள்ள ரஞ்சித் சிங் சவுதாலா உட்பட ஒன்பது எம்.எல்.ஏ.,க்களுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. அதில், சிலர் காங்கிரசுக்கு தாவியுள்ளனர். சிலர் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், ஹரியானா முன்னாள் எம்.எல்.ஏ.,வும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான சஷி ரஞ்சன் பரமர், பிவானி தொகுதியில் போட்டியிட சீட் கேட்டிருந்தார். ஆனால் அத்தொகுதி வேறு ஒருவருக்கு ஒதுக்கப்பட்டது.
இது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, வேதனையை மறைக்க முடியாமல் கதறி அழுதார். ''எனக்கு சீட் கிடைத்துவிடும் என தொகுதி முழுக்க கூறியிருந்தேன். கட்சியின் இந்த முடிவு எனக்கு மிகுந்த வேதனையை தருகிறது,'' என்றார்.