கர்நாடகாவில் தீவிரம் காட்டும் கோடை மழை மின்னலுக்கு சிர்சியில் சிறுவன் பலி
கர்நாடகாவில் தீவிரம் காட்டும் கோடை மழை மின்னலுக்கு சிர்சியில் சிறுவன் பலி
ADDED : மே 19, 2024 03:42 AM

பெங்களூரு : கர்நாடகாவில் கோடை மழை தீவிரமடைந்து உள்ளது. ஷிர்சியில் மின்னல் தாக்கி, சிறுவன் உயிரிழந்தான்.
கர்நாடகாவில் ஆண்டுதோறும் ஜூன் இறுதி அல்லது ஜூலை முதல் வாரத்தில், தென்மேற்கு பருவமழை துவங்கும். கடந்த ஆண்டு பருவமழை சரியாக பெய்யவில்லை. இந்த ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்திலேயே, வெயில் கொளுத்த ஆரம்பித்தது. இதனால் நீர்நிலைகள் வறண்டு போக ஆரம்பித்தன. தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. கோடை வெயிலும் தன் பங்குக்கு வறுத்து எடுத்தது. 'அய்யோ கடவுளே மழை எப்போது தான் பெய்யுமோ' என, கர்நாடக மக்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
இந்நிலையில், கர்நாடகாவில் தற்போது கோடை மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் அடித்தாலும், மாலையில் நல்ல மழை பெய்கிறது. மாநில தலைநகர் பெங்களூரில் தினமும் மாலையில் மழை பெய்தது.
கடந்த மூன்று நாட்களாக மழை பெய்யவில்லை. ஆனாலும் வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. நேற்று மதியத்தில் இருந்தே வானம் மேகமூட்டமாக இருந்தது. இரவு 7:30 மணி வரை மழை பெய்யவில்லை.
இடி, மின்னலுடன்...
ஆனால் 7:45 மணிக்கு திடீரென, மழை பெய்ய ஆரம்பித்தது. விதான் சவுதா, சிவாஜிநகர், கப்பன் பார்க், சாளுக்யா சதுக்கம், கன்டோன்மென்ட், ஹெப்பால், ஜெயமஹால், இந்திராநகர் உள்ளிட்ட பகுதிகளில், அரைமணி நேரத்திற்கு மழை பெய்தது.
வார இறுதி நாள் என்பதால், சாலையில் வாகனங்கள் குறைவாக ஓடியதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. ஆனாலும் இருசக்கர வாகனங்களில் வெளியே சென்றவர்கள், மழையில் நனையாமல் இருக்க, மெட்ரோ ரயில் நிலையங்கள், மேம்பாலங்களில் அடியில் நின்று கொண்டனர்.
பெங்களூரு ரூரலில் தாபஸ்பேட், ஹொஸ்கோட், நெலமங்களா, தொட்டபல்லாப்பூர் பகுதிகளில், இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. ராம்நகர் மாவட்டத்தில் ராம்நகர், மாகடி, கனகபுரா, சென்னப்பட்டணா ஆகிய நான்கு தாலுகாக்களிலும், நேற்று மதியம் 3:00 மணியில் இருந்து இரவு 7:00 மணி வரை தொடர்ந்து மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். விவசாய பணிகளை மேற்கொள்ளவும் தயாராகி வருகின்றனர்.
தாழ்வான பகுதியில்
துமகூரு குப்பியில் பெய்த கனமழையால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சாக்கடை கழிவுநீரும் கலந்ததால் துர்நாற்றம் வீசியது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்தது.
குப்பியில் இருந்து சேலுார் செல்லும் வழியில் உள்ள, ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
கனமழைக்கு குப்பி தாலுகாவில் ஏழு வீடுகள் இடிந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் இல்லை.
உத்தர கன்னடாவின் சிர்சி பனவாசியில் நேற்று மதியம் மழை பெய்தது. அப்போது அப்பகுதியில் உள்ள மைதானத்தில், சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடினர். மின்னல் தாக்கியதில் சஜித் அஷ்பத் அலி ஷேக், 15, என்ற சிறுவன் இறந்தார். விஜயநகராவின் ஹகரிபொம்மனஹள்ளி, ஹரப்பனஹள்ளி, கோட்டூர், கம்பளி, அரசிகெரே பகுதியில், நான்காவது நாளாக நேற்றும் மழை பெய்தது.
21 ஆடுகள் பலி
அரசிகெரேயில் உள்ள வயல்களில் தண்ணீர் புகுந்து உள்ளது. கலபுரகி கலகி ராஜாபுரா கிராமத்தில், மின்னல் தாக்கியதில் 21 ஆடுகள் பலியாகின. மைசூரு மாவட்டத்தில் மைசூரு டவுன், பிரியப்பட்டணா, எச்.டி.,கோட்டே, ஹுன்சூரிலும் மழை வெளுத்து வாங்கியது. பிரியப்பட்டணாவில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
மைசூரு டவுனில் சாலையில், மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. குடகிலும் பரவலாக மழை பெய்தது. சித்ரதுர்காவில் ஹொலல்கெரே தாலுகா ராமஹட்டி கிராமத்தில், சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு, வாழை மரங்கள் சாய்ந்தன.
மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்தது. கோடை மழை தீவிரம் எடுத்து உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

