ADDED : ஏப் 15, 2024 12:19 AM
ரேவா: மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன், 40 மணி நேர போராட்டத்திற்கு பின் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தின் மணிக்கா கிராமத்தில் கடந்த 12ம் தேதி, 6 வயது சிறுவன் தன் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தான்.
அப்போது, எதிர்பாராதவிதமாக அப்பகுதியில் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் அச்சிறுவன் தவறி விழுந்தான். அங்கு வந்த போலீசார், தீயணைப்பு துறையின் உதவியுடன் சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அந்த சிறுவன், 70 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணற்றில், 40 அடி ஆழத்தில் சிக்கி இருப்பதை கண்டறிந்தனர். மாநில பேரிடர் அவசர மீட்புப் படையினரும் சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய சிறுவனுக்கு குழாய் வாயிலாக ஆக்சிஜன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், 40 மணி நேர தொடர் போராட்டத்திற்கு பின், அச்சிறுவனின் உடலை மீட்புக்குழுவினர் நேற்று மீட்டனர். சிறுவன் சடலமாக மீட்கப்பட்டதால், பெற்றோரும், அந்த பகுதி மக்களும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இது தொடர்பாக கலெக்டர் பிரதீபா பால் கூறுகையில், “ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுவனை மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டோம். ஆனால், துளையின் ஓட்டை மிகவும் குறுகலாக இருந்ததால், சிறுவனை உயிருடன் மீட்க முடியாமல் போனது,” என்றார்.

