பா.ஜ., தலைவருக்கு எதிராக போர்க்கொடி அதிருப்தியாளர்களுக்கு மேலிடம் அழைப்பு
பா.ஜ., தலைவருக்கு எதிராக போர்க்கொடி அதிருப்தியாளர்களுக்கு மேலிடம் அழைப்பு
ADDED : ஆக 17, 2024 11:15 PM

பெங்களூரு: பா.ஜ., மாநிலத் தலைவர் விஜயேந்திராவுக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ள அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ் ஜார்கிஹோளி, பசனகவுடா பாட்டீல் எத்னால் ஆகியோரை, அவசரமாக டில்லிக்கு வரும்படி, பா.ஜ., மேலிடம் அழைத்துள்ளது.
முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா, பா.ஜ., மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற நாள் முதலே, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
பாதயாத்திரை
விஜயபுரா எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால், கோகாக் எம்.எல்.ஏ., ரமேஷ் ஜார்கிஹோளி, ஹரிஹர் எம்.எல்.ஏ., ஹரீஷ், முன்னாள் எம்.பி.,க்கள் பிரதாப் சிம்ஹா, சித்தேஸ்வர் உட்பட பல தலைவர்கள் அடிக்கடி விஜயேந்திராவுக்கு எதிராக பேசி வருகின்றனர்.
விஜயேந்திரா தலைமையில் நடந்த மைசூரு பாதயாத்திரை உட்பட வெவ்வேறு போராரட்டங்களுக்கு அதிருப்தியாளர்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. அத்துடன், வால்மீகி முறைகேடு ஆணைய முறைகேட்டை கண்டித்து, பல்லாரியில் தனியாக பாதயாத்திரை நடத்தவும் அதிருப்தியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
புறக்கணிப்பு
கடந்த வாரம் விஜயேந்திராவுக்கு எதிராக பெலகாவியில் ரகசிய கூட்டம் நடத்தினர்.
பாதயாத்திரைக்கு விஜயேந்திராவை புறக்கணிக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதனால் கட்சி தொண்டர்களிடையே குழப்பம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
கட்சி பிளவுபடும் வாய்ப்பும் உள்ளது. அதுமட்டுமின்றி பா.ஜ.,வினரை காங்கிரஸ் தலைவர்கள் குற்றஞ்சாட்ட வரப்பிரசாதமாக அமையும். இதற்கிடையில், பெங்களூரில் வரும் 21ம் தேதி அதிருப்தியாளர்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையறிந்த ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் அதிருப்தியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதன் பின், கூட்டத்தை தேதி குறிப்பிடாமல் அதிருப்தியாளர்கள் ஒத்திவைத்தனர். இந்நிலையில், பசனகவுடா பாட்டீல் எத்னால், ரமேஷ் ஜார்கிஹோளி ஆகியோரை அவசரமாக டில்லிக்கு வரும்படி பா.ஜ., மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது.

